Udhayanidhi Stalin indirectly criticizes TVK leader Vijay
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, புதிதாக கட்சி தொடங்கியிருக்கும் தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதனால், திமுக தலைவர்கள், விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதன்படி, சமீபத்தில் திமுகவின் இளைஞர் அணி சார்பில் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘திமுக 75 - அறிவுத்திருவிழா’ என்ற நிகழ்வில், இளைஞரணிச் செயலாளரும், துணை முதல்வரும் உதயநிதி ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்தார். அதில் அவர், “இளைஞரணி செயலாளர் வரும்போது கைதட்டி விசில்லடிச்சு கூடி கலையற கூட்டம் கிடையாது. இன்றைக்கு இத்தனை பேரும் ரெண்டு நாள் உட்காந்துருக்கீங்கன்னா நீங்கள் யாரையோ பார்க்க வந்த கூட்டம் கிடையாது. இன்றைக்கு அரசியலில் சில பேர் அடித்தளமே இல்லாமல் உள்ள வர முயற்சிக்கிறாங்க. கண்காட்சி வருடத்திற்கு ஒரு முறை நடக்கும். அங்கே தாஜ் மஹால், ஈஃபிள் டவர் போன்ற செட் போட்டிருப்பார்கள். உடனே, அதனை இளைஞர்கள் பார்த்து செல்ஃபி எடுப்பார்கள். கூட்டம் கூட தான் செய்யும். அதெல்லாம் வெறும் அட்டைகள் தான். அதற்கு எந்த விதமாக அஸ்திவாரமோ, கொள்கையோ கிடையாது. சும்மா தட்டினால் போதும், அல்லது சின்ன காற்றடித்தால் போதும் உடைந்துவிடும். எமர்ஜென்சியையே பார்த்த கழகம் திமுக” என்று தவெகவும், தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தவெக தலைவர் விஜய், திமுக மீண்டும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதில் அவர், “அவர்களை நாம் விமர்சிப்பதாக எண்ணித்தான் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிக் கொக்கரிக்கின்றனர். அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?” என்று கூறினார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்யை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் மறைமுகமாக தாக்கி விமர்சனம் செய்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக சார்பில் இன்று (16-11-25) நடைபெற்ற விழாவுல் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “அதிமுக தொண்டர்களுக்கு பெரியார் கொள்கையை பற்றி தெரியாது, அண்ணா என்ன சொன்னார் என்று தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அதிமுக என்ற கட்சி எதற்காக தொடங்கப்பட்டது என்றே அவர்களுக்கு தெரியாது. திமுகவை விமர்சனம் செய்ய வேண்டும், கலைஞரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது தான் அதிமுக. இப்பவும் அந்த கொள்கைகள் தெரிய கூடாது என்று அந்த கட்சியினுடைய பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
ஏனென்றால் அவர்களுக்கு வரலாறு தெரிந்துவிட்டால், மக்கள் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கின்ற கேள்வியை நாளைக்கு அதிமுக தொண்டர்களே கேட்பார்கள் என்பதற்காக அவர் அந்த வேலை செய்கிறார். அதிமுக தொண்டர்களுக்கு கொள்கை தெரியாமல் இருந்தால் கூட பரவாயில்லை. எடப்பாடி பழனிசாமிக்கே எந்த கொள்கையும் கிடையாது, திராவிடம் என்றால் என்ன கூட அவருக்கு தெரியாது. இதுதான் இன்றைக்கு அதிமுக உடைய நிலைமை. அதிமுகதான் எப்படி இருக்கிறது என்றால் இன்னும் சில கும்பல்கள் புதிதாக கிளம்பி இருக்கிறது.
நம்முடைய அறிவுத் திருவிழா நடந்ததற்கு நான்கு நாட்களுக்கு பிறகு அவர்களுக்கே தெரிந்திருக்கிறது. எப்படி அறிவுத் திருவிழா நடத்தலாம் என்று கேட்கிறார்கள். அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான். அந்த விழாவில் அவர்களை விமர்சித்து பேசிவிட்டோம் என்று கோபம் வேற. எப்படி போலீஸை பார்த்தால் திருடனுக்கு பயம் வருமோ அறிவு என்று வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி. சுகாதார மேம்பாட்டை பற்றி பேசும்போது கிருமிகளை பற்றி பேசாமல் இருக்க முடியுமா?. கிருமியிடம் இருந்து நாம் எப்படி விலகி இருக்க வேண்டும் என்று பேசினால், சுகாதார மேம்பாட்டை பற்றி தெளிவாக பேச முடியும். அது போலத்தான் அறிவுத் திருவிழா கொள்கைகளை பற்றி பேசும்போது கொள்கையற்ற கும்பலுடைய ஆபத்தை பற்றி சில பேர் சுட்டி காட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நாம பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று விஜய்யை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
Follow Us