தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தினார். இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “தமிழ்நாட்டு மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பது நம்முடைய இளைஞரணி. ஆனால் எந்த அமைப்பு பலமும் இல்லாமல், எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் கொள்கை என்றால் என்ன? லட்சியம் என்றால் என்ன? என்று எதுவுமே தெரியாமல் வெற்று கூச்சல் போடுகின்ற ஒரு கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டில் சுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களால் தமிழ்நாட்டுக்கு எந்தவித பயனும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், அவர்களால் அவர்களுக்கே எந்த பயனும் கிடையாது. இதை தமிழ்நாட்டு மக்கள் விரைவில் உணர்த்துவார்கள்.
நம்முடைய கழக தலைவர் 1976 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதம் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இப்போது சரியாக 50 ஆண்டுகள் ஆகின்றது. அன்றைக்கு ஒரு இளைஞராக சிறைக்குச் சென்ற தலைவர் வெளியே வரும்போது பண்படுத்தப்பட்ட ஆற்றல்மிகு தலைவாக வெளியே வந்தார். இன்றைக்கும் அதே துணிச்சலோடு வீரத்தோடு பாசிச சக்திகளை எதிர்த்து நிற்கிறார். அதுமட்டுமல்லாமல் அப்போதும் இப்போதும் எப்போதும் மக்களோடு மக்களாக நிற்கின்ற தலைவராக நம்முடைய தலைவர் இருக்கிறார். அதனால் திமுகவுக்கும் முதல்வருக்கும் மக்கள் செல்வாக்கு ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகிறது. அதனால் சங்கிகளுக்கு நம் மேல் எப்போது பார்த்தாலும் ஒரு எரிச்சல், ஒரு கோபம். இதுநாள் வரைக்கும் தமிழ்நாட்டு பக்கம் எட்டி பார்க்காத பிரதமர் மோடி இப்போது தமிழ்நாட்டை நோக்கி வர ஆரம்பித்திருக்கிறார். தேர்தல் வந்த உடனே அவருக்கு தமிழ்நாடு ஞாபகம் வந்துவிடும். இனிமேல் மோடியை பிடிக்க முடியாது, அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருவார், திருக்குறள் சொல்லுவார் கடலுக்கடியில் போய் தியானம் எல்லாம் செய்வார்.
கொஞ்ச நாள் முன்னாடி தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். தமிழ்நாட்டுக்கு டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும் என்று சொன்னார். பிரதமர் மோடி அவர்களே நாங்கள் திராவிட மாடல் எனும் சிங்கிள் இன்ஜினை வைத்து ஏற்கனவே டபுள் டிஜிட் 11.19% வளர்ச்சியை எட்டிவிட்டோம். நீங்க சொல்கிற அந்த டப்பா இன்ஜினை வைத்துக்கொண்டு பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்கள் இன்னும் 6 சதவீத வளர்ச்சியை கூட தொடவில்லை. தமிழ்நாடு அடைந்திருக்கிற வளர்ச்சியில் பாதியை கூட நீங்கள் தொடவில்லை. பொதுவாக தேர்தலை ஜனநாயக திருவிழா என்று சொல்வார்கள். ஒரு திருவிழாவில் வான வேடிக்கை நடக்கும், மக்கள் எல்லாம் உற்சாகமாக இருப்பாங்க, எல்லாரும் எல்லாரும் சேர்ந்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். அப்படிப்பட்ட ஒரு அணியாகத்தான் நம்முடைய தலைவர் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகிழ்ச்சியான அணியாக இன்றைக்கு இருக்கிறது. அதே மாதிரி திருவிழா நேரத்தில புது புது கடைகள் எல்லாம் போடுவார்கள், மக்களை கூப்பிட்டு பொய் விளம்பரம் சொல்லி பொய் வியாபாரம் எல்லாம் பண்ணுவார்கள். பலூன் எல்லாம் ஊதி குழந்தைகளுக்கு எல்லாம் ஷோ காட்டுவாங்க. அது மாதிரி தான் இன்றைக்கு தேர்தல் வந்த உடனே தேர்தல் தமிழ்நாட்டில் புதுசு புதுசாக கடை விரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எப்படி திருவிழா நேரத்தில் போட்ட கடை எல்லாம், திருவிழா முடிந்தவுடன் காணாமல் போய்விடும். அதே மாதிரி இந்த தேர்தல் முடிந்ததும் அந்த கடை அனைத்தும் காலி ஆகிடும். ஆனால் திமுக தான் என்னைக்குமே மக்களோடு மக்களாக நின்று கொண்டிருக்கும்” என்று தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/07/udhay-2026-02-07-19-31-50.jpg)