தி.மு.க. இளைஞரணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு இன்று (07-02-26) விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சி கலைஞர் திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுமார் ஒரு லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டை, திமுக இளைஞரணிச் செயலாளரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நடத்தினார். இந்த மாநாட்டில் கனிமொழி எம்.பி, திருச்சி சிவா, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த மாநாட்டில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “திருவிழா கூட்டத்தில் பிள்ளை பிடிக்கிற கோஸ்டி, பிக் பாக்கெட் அடிக்கிற கோஸ்டியும் உள்ள வருவார்கள். மிட்டாய் வாங்கி தரேன், ஐஸ்கிரீம் வாங்கி தரேன், சாக்லேட் வாங்கி தரேன் என்று குழந்தைகளை கடத்த பார்ப்பார்கள். அதே மாதிரி தான் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து நான் காப்பாற்றுகிறேன், பெரா வழக்கில் இருந்து நான் உங்களை காப்பாற்றுகிறேன், மெடிக்கல் காலேஜ் கேஸ் வழக்கில் இருந்து நான் உங்களை காப்பாற்றுகிறேன், சம்மந்தி டெண்டர் எடுத்த வழக்கை நான் முடித்து தருகிறேன் என இப்படி வழக்கை எல்லாம் காட்டி காட்டி இன்றைக்கு அடிமைக் கூட்டத்தை பாசிஸ்டுகள் தூக்கி இருக்கிறார்கள். இந்த மிரட்டலுக்கு எல்லாம் அடிமை அதிமுகா பயப்படலாம், ஆனால் திமுகவின் தொண்டன் எந்த உருட்டல் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டான். ஏனென்றால், எங்களை வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான ஒரு தலைவர். பாசிஸ்டுகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி தமிழ்நாடு என்றைக்குமே உங்க கையில் சிக்காது. ஏனென்றால் தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் தான்.

Advertisment

சமீபத்தில் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தார்கள். வழக்கம் போல் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் தரவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை படித்து முடிக்க கூட இல்லை, அதற்குள் சிறப்பான பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து சொல்கிறார். முரட்டு பக்தர்கள், முரட்டு தொண்டர்கள் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், முரட்டு அடிமை யார் என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான். இந்தியாவிலேயே முரட்டு அடிமை யாரென்றால் அவர் தான். மோடி தமிழ்நாட்டுக்கு வந்த உடனே சூரியன் மறைந்துவிட்டது என்று சந்தோஷப்படுகிறார். கால்களை மட்டுமே பார்த்துட்டு இருந்தீர்கள் என்றால் சூரியன் எப்படி தெரியும்? மேலே பார்த்தால் தான் சூரியன் தெரியும் என்று நம்முடைய தலைவர் சொன்னார். உடனே கோபம் வந்து கால்களை பார்த்து நடந்தால் நேராக பார்த்து நடக்கமுடியும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களே தலையை நிமிர்ந்து பாதையை பார்த்து நடந்தால் தான் நேராக நடக்க முடியும். நீங்கள் மோடியுடைய காலையும், அமித்ஷாவுடைய காலையும் பார்த்துக் கொண்டே நடந்தால் உங்களை மாதிரி முட்டு சந்தில் தான் போய் நிக்க முடியும். இவ்வளவு நாளாக அதிமுக பாஜகவுடைய கிளையாக இருந்தது, இன்னைக்கு அதிமுக, பாஜகவுடைய இலையாக மாறிவிட்டது.

Advertisment

தமிழ்நாட்டில் பத்து தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டுக்குள் உங்களை ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அடுக்கடுக்கான திட்டங்களை நம்முடைய தலைவர் செய்து கொடுத்திருக்கிறார் இவ்வளவு சாதனைகளை செய்து நாம் தைரியமா மக்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். மற்றவர்கள் மாதிரி வீட்டுக்குள் போய் தூங்கிட்டு மாசத்துக்கு ஒரு முறை வெளியில் வந்து முகத்தை காட்டி திருட்டுத்தனமாக டெல்லிக்கு போய் சுத்துகிற தலைவர் கிடையாது நம்முடைய தலைவர். நம்முடைய முதல்வர் ஒவ்வொரு நாளும் மக்களை சந்தித்து கொண்டிருக்கிறார், மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களுக்கான திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் சில பேர் மக்களை கண்டாலே தெரிச்சு ஓடுகிறார்கள், தூக்கத்தில் இருந்து எந்திரிச்சு கண்டதையே உளறிட்டு இருக்கிறார்கள். அரசியல் அறிவே இல்லாத சில அட்டைகள் என்னதான் உளறினாலும், புலம்பினாலும் களத்தில் நின்று ஜெயிக்க போகிற கட்சி உதய சூரியன் சின்னம் தான்” என்று பேசினார்.