ஶ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் ஆலோசனைக்  கூட்டத்தில்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  தங்கம் தென்னரசு உள்ளிட்டோர்  கலந்து  கொண்டனர்.  

Advertisment

இக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது -“ஒரே இடத்தில் உங்களைச் சந்தித்ததில்  எனக்கொரு உற்சாகம் கிடைத்துள்ளது.  விருதுநகர் மாவட்டம் என்றாலே உற்சாகம்தான்.  இந்த முறை ஸ்ரீவில்லிபுத்தூரில்  ஜெயிக்கப் போவது உறுதி.  நிதியும், வருவாயும் எனது பக்கத்தில்தான்  இருக்கிறது. முதல்வராக , துணை முதல்வராக இருப்பதற்கு  நிதியும் வருவாயும்   முக்கியம். அப்படி இரண்டு அமைச்சர்கள் நமக்கு கிடைத்திருக்கிறார்கள்.  

இயக்கத்தின் வேர் நீங்கள்தான். கலைஞருக்கு ஒரு பெயர் உண்டு. நின்ற  தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர் மட்டும் தான். அதேபோல்,   தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு அனைத்து தேர்தல்களிலும்  நாம்   வெற்றி பெற்றுள்ளோம். தொண்டர்களாகிய நீங்கள் இல்லாமல் இந்த அரசு கிடையாது. கடந்த சில  நாட்களுக்கு முன்பு முப்பெரும் விழா வைத்து ஒரு சிறப்பான மாநாடு நடத்திக்  காட்டினோம். நமது இயக்கம் தொடங்கி  76 ஆண்டுகள் ஆனாலும் வலிமையோடு  இருக்கிறோம்.  எத்தனையோ அடக்கு முறையைச் சந்தித்த இயக்கம் நமது  இயக்கம். பெரிய பெரிய எதிரியைக்கூட அரசியல் களத்தில் சந்தித்த இயக்கம்  நமது  இயக்கம். தற்போது  எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன்  போன்றோர்  உள்ளனர். நம்மை எதிர்ப்பதற்கு யாரும்  இல்லை. இந்தியாவிற்கே சிறந்த எடுத்துக்காட்டாக  நமது முதல்வர்  ஸ்டாலின் உள்ளார். மகளிருக்கான சிறந்த பயணம் விடியல்  பயணம். ஸ்டாலின் பஸ் என பெண்கள் கூறுகிறார்கள். ஶ்ரீவில்லிபுத்தூரில் 7  லட்சத்து 15 ஆயிரம் பேர் விடியல் பயணம் மேற்கொண்டுள்ளனர். காலை உணவுத்  திட்டத்தில் 22 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர். திராவிட மாடல் அரசு  என்றால் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருப்பதுதான்.  ஶ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் காலை உணவுத்  திட்டத்தால் 11,500 மாணவர்கள்  பயன்பெறுகின்றனர். இது வரை 8 லட்சம் மாணவர்கள் மாதம் 1000 ரூபாய்  வாங்கியுள்ளனர். தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தோம். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.   இன்னும் 2  மாதங்களில் இன்னும் அதிகமாக மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.  இதை  நான் வாக்குறுதியாகவே தருகிறேன்.

கொரோனா காலத்தில் பிரதமர் மோடி என்ன செய்தார்?  லைட் அடித்து   சவுண்ட் விட்டால் கொரோனா போய் விடுமா? மாடியில் நின்று கை தட்டினால்  கொரோனா போய்விடுமா?  இப்படி ஒரு பிரதமர் கூறலாமா? கொரோனா   காலத்தில் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த ஒரே முதல்வர் நமது  முதல்வர்.    தமிழகத்தில்  தங்களைக் கால் வைக்க  விடவில்லையே என்ற வயித்தெரிச்சல்  சங்கிகளுக்கு. நமக்கு எவ்வளவோ  இடஞ்சல் கொடுக்கிறார்கள்.  புதிய கல்விக்  கொள்கை ஏற்றால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளே வரும்.  குலக் கல்வித் திட்டம்  வரும்.  இதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று  ஆரம்பித்த இயக்கம்,   சுயமரியாதை இயக்கம்.   தொகுதி மறு சீரமைப்பில்  நாடாளுமன்றத்துக்கான 39  தொகுதிகளில்  7 தொகுதியைக்  குறைக்கப் போகிறார்கள்.  இதைக் கண்டறிந்து,   அதற்கு எதிராக  முதலில் குரல் கொடுத்தவர் நமது முதல்வர்.

Advertisment

ஶ்ரீவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையம், திருமங்கலம் - தென்காசி சாலை ,  பிளவக்கல் அணை, வத்திராயிருப்பு கண்மாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு  பணிகளைச் செய்துள்ளோம் . ஶ்ரீவில்லிபுத்தூர்  தொகுதியில் வெற்றி பெற்றால் இன்னும் பல திட்டங்கள் கொண்டு வருவோம் என மக்களிடம் எடுத்துக்  கூறுங்கள். ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் ஒரு கோடி பேரை நமது  இயக்கத்தில் சேர்த்துள்ளோம். ஒன்றிய பாஜக நிறைய தில்லு முல்லு வேலை  செய்யும். அடுத்த 6 மாதம் நீங்கள் ஓய்வு எடுக்கவே கூடாது.    அதிமுக,  அண்ணா திராவிட  முன்னேற்ற கழகமா? அமித்ஷா முன்னேற்ற கழகமா? அடிமை முன்னேற்ற கழகமா?  என்பது தெரியவில்லை. கார்  மாற்றுவதும் கால் மாற்றுவதும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கைவந்த கலை.  அதிமுக வில் தற்போது பல அணிகள் உள்ளது   இனி ஒரு தொகுதிக்கு ஒரு அணி உருவாகும்.  பாஜக அதிமுகவை கொத்து புரோட்டா போல் போட்டுவிட்டது.   நிரந்தர அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமிதான்  இருக்கவேண்டும்.  அதை நான் வழி மொழிகிறேன். அப்போதுதான் தமிழக  மக்களுக்கும் எங்களுக்கும் நல்லது.  அடிமைகளுக்கு உதாரணம்தான் எடப்பாடி  பழனிச்சாமி.

வாரம் ஒரு முறை மட்டும் நான் வீட்டை விட்டு  வெளியில் வருபவன் கிடையாது.  தினந்தோறும் மக்களைச் சந்தித்து வருகிறேன்.  2011 தேர்தலில் பாஜகவுடன்  சேர்ந்ததால் நாம் தோற்றோம் என அதிமுகவினரே கூறினார்கள். தேர்தலுக்கு தேர்தல் மாறும் கூட்டணி அதிமுக கூட்டணி. நமது கூட்டணி கொள்கைக்  கூட்டணி ...234 தொகுதிகளிலும் கலைஞர்தான் நமது வேட்டாளர் என நமது பணி  இருக்கவேண்டும்.” எனப் பேசினார்.