தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த செப்டம்பர் 13ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமைகளிலும் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விஜய் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் 13ஆம் திருச்சியில் தன்னுடைய முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட விஜய், அங்கு தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதனை தொடர்ந்து, கடந்த 20ஆம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 2 மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சனிக்கிழமையான நாளை (27-09-25) நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் விஜய் வெளியே வந்து மக்களை சந்திக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனத்திற்கு பதிலளித்த விஜய், மக்களுக்கு தொந்தரவு இருக்கக்கூடாது என்பதற்காகவும், வேலை நாட்களில் அவர்களுக்கு சொந்தரவு கொடுக்கக்கூடாது என்பதற்காகவும் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்வதாக சுற்றுப்பயணத்தில் பதிலளித்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் நான் அல்ல என்று தவெக தலைவர் விஜய்யை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார். சென்னை வேப்பேரியில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று (26-09-25) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “நான் பல மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போவேன். வாரத்தில் 4,5 நாட்கள் நான் வெளியூரில் தான் இருப்பேன். வெறும் சனிக்கிழமை சனிக்கிழமை மட்டும் நான் வெளியே வரமாட்டேன். ஞாயிற்றுக்கிழமை கூட நான் வெளியே சுற்றி தான் இருப்பேன். இன்றைக்கு என்ன கிழமை என்று கூட எனக்கு தெரியவில்லை. பல மாவட்டங்களுக்கு செல்லும் போது மக்கள் கூட்டமாக மனுக்களோடு நிற்பார்கள்.
அப்போது வண்டியை நிறுத்த சொல்லி அனைத்து மனுக்களையும் வாங்குவேன். மக்கள் பாராட்டுவார்கள், வாழ்த்துவார்கள். குறிப்பாக மகளிர், ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது அப்பாவிடம் சொல்லிவிடு என்பார்கள். ஆயிரம் ரூபாய் எப்படி பயன்படுகிறது என்று அவர்களிடம் கேட்பேன். அப்போது 90 சதவீதம் பேர், மருத்துவ செலவிற்கு பயன்படுகிறது என்பார்கள்” என்று கூறினார்.