'Udhayanidhi broke the truth yesterday' - TTV Dinakaran interview Photograph: (tvv)
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொல்லிய கருத்து உண்மை என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வரவேற்றுள்ளார்.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ''அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தான் தொடர் வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்கள்தான் நீங்கள் செய்யும் நல்லது. எங்களுடைய வேலையும் சுலபமாக இருக்கும். அதிமுகவினர் இதை ஏற்றுக்கொள்வார்களா எனத் தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர்'' எனத் தெரிவித்திருந்தார்,
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசுகையில், ''துணை முதல்வர் உதயநிதி அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார். எங்களது வெற்றி ரகசியமே பழனிசாமி தான். பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக நீடிக்க வேண்டும். அவர் நூறாண்டுகள் வாழ வேண்டும். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் வெற்றி எங்களுக்கு சுலபம் என்கிறார். அவர்களுக்கு கூட்டணி பலம் என்பதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பழனிசாமி தான் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் என்பதைப் போட்டு உடைத்து விட்டார்.
இதை ஜெயலலிதாவின் தொண்டர்கள், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என முயற்சி செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக இருக்கும் வரை அது திமுகவிற்கு வெற்றியைத் தரும் என்று துணை முதல்வர் சொன்னதை நீங்கள் வேண்டுமானால் வேறுமாதிரி பார்க்கலாம். அவர் சிலேடையாக சொல்லி இருந்தாலும், வஞ்சப்புகழ்ச்சியாக சொல்லி இருந்தாலும் உண்மை அதுதான். உண்மையாக எடப்பாடி பழனிசாமி எனும் சுயநல, துரோக சிந்தனை கொண்ட நபர் இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்பதுதான் உண்மை''என்றார்.