விநாயகர் சதுர்த்தி திருவிழா நேற்று (27-08-25) நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் உள்ள பிள்ளையார் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. சிறிய களிமண் சிலைகள் முதல் 10 அடி முதல் பல்வேறு உயரங்களில் விநாயகர் சிலைகள் விற்கப்பட்டது. கொழுக்கட்டை பிள்ளையார், தேங்காய் பிள்ளையார் என பல்வேறு வகைகளில் பிள்ளையார் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. குறிப்பாக வட மாநிலங்களில், இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் 10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவின் போது ஒவ்வொருவரும் தங்களது வீட்டில் பிள்ளையார் சிலைகளை வைத்து பூஜை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவரான ராஜ் தாக்கரே வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அவரது உறவினரும், உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார். 20 வருடங்களுக்கு மேலாக பிரிந்திருந்த உறவினர்களான இவர்கள், ஒரே வீட்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உத்தவ் தாக்கரே, பால் தாக்கரேவின் மகன் ஆவார். ராஜ் தாக்கரே, பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். உத்தவ் தாக்கரேவை தன்னுடைய அரசியல் வாரிசாக பால் தாக்கரே அறிவித்ததால், ராஜ் தாக்கரே 2005 இல் சிவசேனாவை விட்டு வெளியேறி நவநிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கினார். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக மாநிலத்தில் இருவரும் இருதுருவங்களாக மாறி போயினர். இந்த சூழ்நிலையில், மாநிலத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்ப்பதற்காக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த ஜூலை மாதம் பேரணி நடத்தினர். இது அம்மாநில அரசியலில் பேசுபொருளானது. உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா இடையேயான கூட்டணி மும்பை மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மராத்தி வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து, கடந்த 20ஆம் தேதி பெஸ்ட் ஊழியர் கூட்டுறவு கடன் சங்கத் தேர்தலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா ஆகியவை கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது. 21 இடங்கள் கொண்ட அந்த தேர்தலில், உத்தவ் தாக்கரே சிவசேனா - மகராஷ்டிரா நவநிர்மாண் சேனா கூட்டணி ஒரு இடத்தைக் கூட வெல்லாமல் படுதோல்வியடைந்தது. இது இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களுக்கும் பெரும் அதிருப்தியை கொடுத்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ராஜ் தாக்கரே வீட்டில் கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் குடும்பம் ஒன்றாக இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரஹன்மும்பை மாநகராட்சி (BMC) தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.