Advertisment

முடிவுக்கு வந்த பகை; இந்தி திணிப்பை எதிர்க்க ஒன்றிணைந்த தாக்கரே சகோதரர்கள்

புதுப்பிக்கப்பட்டது
thackeray

Uddhav Thackeray and raj thackarey unite to oppose Hindi imposition maharashtra

மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி மகாராஷ்டிரா பா.ஜ.க கூட்டணி அரசு அமல்படுத்துவதாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தின் மூலம், வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே, 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருந்தது மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Advertisment

தேசிய கல்விக் கொள்கை மூலம் மகாராஷ்டிராவில் இந்தி மொழி திணிக்கும் நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானதால், மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயமாகவே உள்ளது என்றும், இந்தி மொழி திணிக்கப்படவில்லை என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென பல்டி அடித்தார். அதனை தொடர்ந்து, பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கண்டிப்பாக இந்தி மொழி இருக்கும் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றது. 

Advertisment

அதனை தொடர்ந்து, 1ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக இருப்பதற்கு பதிலாக பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் படிக்க விருப்பம் தெரிவித்தால் அவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநில அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்தி மொழியை ஆதரிக்கும் தேசிய கல்வி கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, அதன் பின்னர் அதே இந்தி மொழியை மறைமுகமாக மாணவர்களுக்கு திணிப்பதாக கூறி மராத்தி அமைப்புகள் உள்பட எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

மாநில அரசின் இந்த முடிவுக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே சிவசேனா அணித் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், “பா.ஜ.க மொழியின் அடிப்படையில் மக்களிடையே பிளவை உருவாக்க முயற்சிக்கிறது. இது ஒரு மொழி அவசரநிலையை விதிக்கிறது. மராத்தி பேசும் மாநிலத்தில் இந்தி திணிப்பை மட்டுமே தான் எதிர்க்கிறேன், அந்த மொழியை அல்ல. மாநிலப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படாது என்று அறிவிப்பதன் மூலம் மொழி திணிப்பு தொடர்பான அனைத்து குழப்பங்களுக்கும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த நிலையில் பிரிந்து கிடந்த உறவினர்களான ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிணைந்து மும்பையில் கூட்டு பேரணி நடத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது எக்ஸ் பக்கத்தில் ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரின் புகைப்படத்தை வெளியிட்டு, ‘மகாராஷ்டிரா பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தி திணிப்புக்கு எதிராக ஒரு ஐக்கிய பேரணி நடைபெறும். ஜெய் மகாராஷ்டிரா’ எனப் பதிவிட்டுள்ளார். மும்பையின் கிர்கான் செளபட்டியில் இருந்து ஆசாத் மைதானம் வரை நடைபெறும் இந்த போராட்டத்திற்கு உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் தலைமை தாங்குவார்கள் என்று கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உத்தவ் தாக்கரே, பால் தாக்கரேவின் மகன் ஆவார். ராஜ் தாக்கரே, பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாகக் கருதப்பட்ட ராஜ் தாக்கரே, உத்தவ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக 2005 இல் சிவசேனாவை விட்டு வெளியேறினார். அடுத்த ஆண்டு ராஜ் தாக்கரே நவநிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

marathi Hindi imposition Raj Thackeray Uddhav Thackeray Maharashtra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe