கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளக் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்திய அளவில் முற்போக்கு மற்றும் மதச்சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் சேர்ந்து இந்த கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணியில், காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் உள்ளிட்ட இந்திய முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த கூட்டணிக்குத் தலைமை ஏற்கப் பீகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் ஆர்வம் காட்டினார். பின்னாளில், அவர் இந்த கூட்டணியில் இருந்து விலகினார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது இந்த கூட்டணி. தேர்தலில், குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பதிவு செய்த போதிலும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இந்த கூட்டணிக்குக் கிடைக்கவில்லை. அதனால் இந்த கூட்டணி எதிர்க்கட்சி எனும் நிலையை அடைந்தது.
இதனையடுத்து நடைபெற்ற மகாராஷ்டிரா, ஹரியானா,டெல்லி ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்தியா கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதே தொடர் தோல்விக்கு காரணம் என அரசியல் நோக்கர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி தலைவர்களே அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, இந்தியா கூட்டணியை தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது இந்தியா கூட்டணியில் பேசுபொருளாக மாறியது. மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி, சரத் பவாரின் சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்தன. ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.கவுடன் நெருக்கமாக இருப்பதாக கருதப்பட்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கூட, இந்தியா கூட்டணியை தலைமை தாங்குவதற்கு மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்தது. இது காங்கிரஸுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது.
இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்குக் காங்கிரசின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், இந்தியா கூட்டணிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றால் தான் ராகுல் காந்தி பிரதமராக முடியும் என்று தெரிவித்திருந்தார். இது காங்கிரஸார் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மணி சங்கர் அய்யருக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்களே கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி, இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ‘இந்தியா கூட்டணிக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் தலைமை ஏற்க வேண்டும். பாஜகவின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் தங்களுக்குள் இருக்கும் கருத்து முரண்பாடுகளை மறந்து, இவர்கள் இருவரில் ஒருவரைக் கூட்டணிக்குத் தலைவராக அறிவிக்க வேண்டும். அதை இப்போதே செய்யவேண்டும்.
ராகுல்காந்தி எவ்வளவு தான் போராடினாலும், கட்சியின் மூத்த தலைவர்களிடையே உள்ளக் கருத்து முரண்பாடுகளால் கூட்டணி பலவீனமான நிலையில் உள்ளது. எனவே, ஒரு தெளிவான தலைமையின் கீழ் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும், இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும்’ என்று தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/18/mkgeo-2026-02-18-20-13-47.jpg)