மத்திய அரசு அறிவித்த தேசிய கல்வி கொள்கை மூலம் வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த ஏப்ரல் அறிவித்திருந்தது. மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தியை மொழி திணிப்பதாகக் கூறி அந்த நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பு வந்ததால், மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்படாது என்று கூறி தனது முடிவுகளிலும் இருந்து மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது.
இந்த சூழ்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த சகோதர்களான உத்தவ் தாக்கரே கடந்த 5ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். சிவசேனா நிறுவனத் தலைவர் பால் தாக்கரே, தன்னுடைய அரசியல் வாரிசாக தனது மகன் உத்தவ் தாக்கரேவை அறிவித்ததால், பால் தாக்கரேவின் சகோதர் மகனான ராஜ் தாக்கரே சிவசேனாவை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து கடந்த 2005ஆம் ஆண்டு நவநிர்மாண் சேனா என்ற தனிக்கட்சியை ராஜ் தாக்கரே தொடங்கி நடத்தி வந்தார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோர் இனிமேல் சேரவே மாட்டார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சேர்ந்திருப்பது நாடு முழுவத்தை கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்தி திணிப்புக்கு எதிராக தாக்கரே சகோதரர்கள் சேர்ந்திருப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ஆம் தேதி கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, “இந்தித் திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தித் திணிப்புக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மொழி நிலைப்பாட்டில் இருந்து உத்தவ் தாக்கரே சிவசேனா விலகி நின்று கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவிக்கையில், “தென் மாநிலங்கள் இந்த பிரச்சனையை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிராக அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால், அவர்களும் இந்தி பேச மாட்டார்கள், மற்றவர்களையும் இந்தி பேச விடமாட்டார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் எங்களின் நிலைப்பாடு அது அல்ல. நாங்கள் இந்தி பேசுகிறோம். தொடக்கப் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. எங்கள் போராட்டம் இதற்கு மட்டுமே. எங்களுடைய வெற்றிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றியில் இருந்து கற்றுக்கொள்வார் என்று கூறியுள்ளார். அவருக்கும் நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம். ஆனால், எங்களிடம் இந்தி படங்கள், இந்தி நாடகங்கள், இந்தி இசை இருப்பதால் யாரும் இந்தி பேசுவதை நாங்கள் தடுக்கவில்லை. தொடக்கப் பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து மட்டுமே எங்கள் போராட்டம். இருப்பினும், ஸ்டாலினின் போராட்டத்தில் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.