கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மேல்சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி 56 வயதான கோவிந்தம்மாள். முருகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனால் கூலி வேலைக்குச் சென்று கோவிந்தம்மாள் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். அந்த வகையில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி ஊரக வேலைத் திட்டத்தில் அப்பகுதியில் உள்ள பெரியமலை அடிவாரத்தில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணிக்காக கோவிந்தம்மாள் சென்றிருந்த நிலையில், மலை அடிவாரத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பர்கூர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோவிந்தம்மாளின் உடலில் காயங்கள் இருந்தன. மேலும் அவர் அணிந்திருந்த அரைப் பவுன் கம்மல், கொலுசு உள்ளிட்டவையும் காணாமல் போயிருந்தன. அதனடிப்படையில் நகைக்காக இந்தக் கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணையைத் தொடங்கினர். இதனிடையே கோவிந்தம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கோவிந்தம்மாள் கட்டையால் தாக்கப்பட்டும் கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி. தங்கதங்கதுரை உத்தரவிட்டார். அதன்பேரில் டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் இளவரசன், எஸ்.ஐ.க்கள் அமர்நாத், பிரபாகரன், விஜயகுமார் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கொலை செய்யப்பட்ட கோவிந்தம்மாளின் கணவர் முருகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு அவர் தனது 57 சென்ட் நிலத்தை சுப்பிரமணி என்பவருக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்து பணம் பெற்றிருந்தார். பின்னர் அந்த நிலத்தை சுப்பிரமணியிடமிருந்து முருகனின் அண்ணன் பச்சியப்பனின் மகன் சக்திவேல் வாங்கியிருக்கிறார். தங்களின் நிலத்தை சக்திவேல் வாங்கிவிட்டாரே என்ற ஆத்திரத்தில் கோவிந்தம்மாள் அடிக்கடி அவரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சக்திவேல் புதிய வீடு கட்டிக் குடிபோனார்.
அப்போது அங்கு வந்த கோவிந்தம்மாள் சக்திவேலையும், அவருக்கு ஆதரவாகப் பேசிய உறவினர்களான மேல்சீனிவாசபுரத்தைச் சேர்ந்த 65 வயதான வெங்கட்ராமனும் 64 வயதான கோவிந்தராஜும் ஆகியோரையும் தகாத வார்த்தையால் திட்டியிருக்கிறார். இது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அதனால் ஆத்திரமடைந்த அவர்கள் கோவிந்தம்மாளைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி ஏரி வேலைக்குச் சென்று திரும்பிய கோவிந்தம்மாளை சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய மூவரும் சேர்ந்து கட்டையால் அடித்தும் கழுத்தை நெரித்தும் கொலை செய்தனர்.
பின்னர் அவரது செல்போன், கால் கொலுசு, காதில் இருந்த அரை சவரன் தங்க கம்மல் ஆகியவற்றை எடுத்து அந்தப் பகுதியில் இருந்த குட்டையில் வீசிவிட்டு, நகைக்காக கொலை நடந்ததைப் போல நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதையடுத்து சக்திவேல், வெங்கட்ராமன், கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
பர்கூர் அருகே சொத்துப் பிரச்சினையில் பெண்ணை உறவினர்கள் உள்பட மூவர் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us