ஒடிசா மாநிலம் காகிதப்பள்ளி சாயி தஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த தாஸ் புளு (வயது 28) மற்றும் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த சாலமன் ராஜு(வயது 27) ஆகிய இரண்டு பேரும் திருப்பதி பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.அப்பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு வேலூர் மாவட்டத்திற்கு வந்து பல்வேறு இடங்களில் செல்போன் மற்றும் பிட் பாக்கெட் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (08.09.2025) காலை வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த அப்துல் என்பவரிடம் செல்போனை திருட முயற்சித்தனர். அப்போது அவரிடம் செல்போன் இல்லாததால் அவர் பாக்கெட்டில் இருந்த 500 ரூபாயை திருடியுள்ளனர். இதனை அறிந்த அப்துல் உடனடியாக வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தாஸ் புளு மற்றும் சாலமன் ராஜு ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் திருடிய செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.