திருவாரூர் மாவட்டம், கொரடாசேரி, வடக்கு மாங்குடி என்ற முகவரியில் வசித்து வந்த குணசீலம் மகன் சதீஸ்குமார் என்பவரது மூத்த சகோதரி சுமதி என்பவர் திருச்சி மாவட்டம் குண்டூர் கிராம சர்வே எண்.71/4ஏ-ல் 2160 சதுரடி வீட்டு மனையை தன் பெயரில் கிரையம் பெற்றுள்ளார்.

Advertisment

தனது சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாற்றம் செய்வதற்கு, திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமம், (பொறுப்பு) குண்டூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் அகமது சுலைமான் என்பவரை கடந்த 01.11.2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் அணுகியுள்ளார்.

Advertisment

அப்பொழுது கிராம நிர்வாக அலுவலராக இருந்த அகமது சுலைமான்,  சதீஸ்குமாரின் சகோதரியின் பெயரில் உள்ள வீட்டு மனைக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டு விட்டதாகவும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பட்டாவை கொடுப்பதற்கு ரூ.2,000/- லஞ்சம் கொடுத்தால்தான் கொடுக்க முடியும் என கறாரா பேசி உள்ளார்.

இதை அடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஸ்குமார் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கடந்த 02.11.2007ஆம் தேதி பொறிவைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புகார்தாரர் சதீஸ்குமார் என்பவரிடமிருந்து லஞ்சப்பணம் ரூ.2,000/-த்தை வி.ஏ.ஓ அகமது சுலைமான் கேட்டு பெற்றபோது, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்கானது திருச்சி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

Advertisment

கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின்  விசாரணை முடிவுற்று, திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி புவியரசு, நவல்பட்டு கிராம நிர்வாக அலுவலர், அகமது சுலைமான் என்பவருக்கு லஞ்சப்பணம் கேட்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ1,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும், மேலும் அரசு ஊழியர் என்ற பதவியை தவறாக பயன்படுத்தி கையூட்டு கேட்டுப்பெற்ற குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000/- அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்ததோடு, மேற்கண்ட சிறை தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

மேற்படி வழக்கில் திருச்சி ஊழல் தடுப்பு டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர் அ.பிரசன்ன வெங்கடேஷ் ஆகியோர் திறம்பட சாட்சிகளை ஆஜர்படுத்தி வழக்கினை திறம்பட கையாண்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் கோபிகண்ணன் வழக்கை திறம்பட நடத்தியும் குற்றவாளிக்கு உரிய தண்டனையும் பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.