நீலகிரி மாவட்டத்தில் கட்டடங்கள் கட்டவும் கிணறு வெட்டுவதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனையும் மீறி பல்வேறு இடங்களில் கட்டடங்கள் கட்டவும், கிணறுகள் தோண்டவும் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் பாறைகள் உடைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள ஒன்னட்டி என்ற பகுதியில் தனியார் தங்கும் விடுதிக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. 

Advertisment

அதோடு கிணறு தோண்டும் பணியானது கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.  இந்த பணியில் குண்டாட பிரிவைச் சேர்ந்த சதீஷ் மற்றும் செல்வா ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிந்து இவர்கள் இருவரும் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

Advertisment

அதே சமயம் இந்த பணி அனுமதி பெற்று நடைபெற்றுள்ளதா என்ற கோணத்தில் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசாரும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணறு வெட்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.