திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகேயுள்ளது தென்மகாதேவமங்கலம் எனும் கிராமம். இக்கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வதமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனஸ்வரர், பிரம்மராம்பிகை கோயில் உள்ளது. சிறிய அளவிலான இந்த சிவன் கோயிலில், மலையேறி செல்லும் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று தாங்களே பூஜை, அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் அமைந்துள்ளது. இதனால், ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபமலை மீது கார்த்திகை தீபத்தின்போது மட்டுமே மலையேற அனுமதி உள்ளது. ஆனால், பர்வதமலையில் தினமும் மலையேறலாம். மேலும், பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் செய்வதால், குறுகிய காலத்தில் பர்வதமலை பிரபலமாகியுள்ளது.

கோயிலுக்குச் செல்லும் பாதை மலையெங்கும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால், மலையேறும் பாதையை அகலப்படுத்தவோ, வசதிகள் செய்யவோ வனத்துறை அனுமதி மறுத்து வருகிறது. மேலும், செங்குத்தான மலையை ஏறுவது மிகவும் கடினமானது, சில இடங்களில் ஆபத்தான பாதையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பக்தியின் காரணமாக ஆபத்தை உணராமல் ஆயிரக்கணக்கான மக்கள் மலை மீது ஏறி செல்கின்றனர்.

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த 15 பேர், சென்னையிலிருந்து வேனில் தென்மகாதேவமங்கலத்துக்கு ஆகஸ்ட் 9 அன்று வந்தனர். பர்வதமலை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்தவர்கள், இரவு மலையில் தங்கினர். ஆகஸ்ட் 10 அன்று மாலை 6 மணிக்கு மலையிலிருந்து இறங்கி வந்தனர்.

Advertisment

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியுள்ளதால், கடந்த சில நாட்களாக லேசானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. வீரபத்திரசுவாமி கோயில் மற்றும் பச்சையம்மன் கோயில் இடையே செய்யாறு செல்கிறது. இந்த ஆற்றைக் கடந்துதான் வர முடியும். ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதாக நினைத்து, மலையிலிருந்து இறங்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆற்றைக் கடக்கத் தொடங்கினர். இதில், சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த வடபழனியின் மனைவி, 36 வயதான தங்கதமிழ், மற்றும் மனோகரனின் மனைவி, 58 வயதான இந்திரா ஆகியோர் ஆற்றின் ஓடையைக் கடக்கும்போது நிலைதடுமாறி விழுந்தனர். அவர்களை வேகமாக வந்த ஆற்று வெள்ளம் அடித்துக்கொண்டு சென்றது. அங்கிருந்தவர்கள் கூச்சல் போட்டு கத்தியும், காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

போளூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வந்து, கரையின் மறுபக்கம் இருந்த 50-க்கும் மேற்பட்டவர்களை கயிறு கட்டி பாதுகாப்பாக அழைத்து வந்து, பக்தர்கள் தங்கும் விடுதியில் தங்கவைத்தனர். சம்பவ இடத்திற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்பகராஜ், எஸ்.பி. சுதாகர், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் உடனே வருகை தந்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். மீட்கப்பட்டவர்களுக்கு உணவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்பாடு செய்து வழங்கியது. காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதல் கூறப்பட்டது.

அங்கேயே முகாம் அமைத்து, காவல்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நேற்று இரவு ஒரு பெண்ணின் உடல் கிடைத்த நிலையில், ஆகஸ்ட் 11 அன்று மதியம் மற்றொரு பெண்ணின் உடல் கிடைத்தது. உடற்கூராய்வுக்குப் பின்னர், அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.