கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே உள்ள மணியார் பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், அப்பள்ளியில் பணியாற்றி வந்த தலைமையாசிரியர் தனபால், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியில் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், தலைமையாசிரியர் தனபால், இயற்பியல் ஆசிரியர் ராஜவேல் மற்றும் பகுதிநேர ஆசிரியர் தேவேந்திரன் ஆகிய மூவரும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமையாசிரியர் தனபாலை, பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, தலைமையாசிரியர் தனபால் தற்போது தலைமறைவாக இருந்து வரும் நிலையில், போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார் பகுதிநேர ஆசிரியர் தேவேந்திரன் மற்றும் இயற்பியல் ஆசிரியர் ராஜவேல் ஆகிய இருவரையும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தலைமைறைவாக இருக்கும் தனபாலை போலீசார் தேடி வருகின்றனர்.