ஆந்திர மாநிலத்தில் இருந்து 29 ஆம் தேதி இரவு பழங்கலை ஏற்றிக்கொண்டு டாடா ஏசி வாகனம் ஒன்று திருவண்ணாமலையை நோக்கி வந்துள்ளது. வாகனத்தில் ஓட்டுநருடன் இளம்பெண் மற்றும் அவரது சகோதரி என இரு பெண்கள் இருந்துள்ளனர். இந்த வாகனம் ஏந்தல் புறவழிச்சாலையில் வந்த போது, அங்கு சோதனையில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சுரேஷ் மற்றும் சுந்தர் இருவரும் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் வாகனத்தை சோதனைசெய்த இரு காவலர்களும், விசாரிக்க வேண்டும் என்று கூறி இரு பெண்களையும் தனியாக அழைத்து சென்றுள்ளனர். பின்னர் ஏந்தல் பகுதியில் உள்ள தோப்பில் வைத்து சகோதரியின் கண்முண்ணே இரு காவலர்களும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் காவலர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பேரில் காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து எஸ்.பி. சுதாகர் தலைமையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காவலர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவில் இருந்து வந்த இளம்பெண்களிடம் போலீசாரே அத்துமீறிய இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் இந்த இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்டு வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலை தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், இளம் பெண்ணை அவர் சகோதரி கண் முன்னரே கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம் இது. பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களாலே, பெண்ணுக்கு நேர்ந்த இக்கொடுமைக்கு இந்த முதல்வர் என்ன பதில் வைத்துள்ளார்? இந்த வெட்கக்கேடான நிலைக்கு முதல்வரின் திமுக அரசு தலைகுனிய வேண்டும்.
மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய காவல்துறையிடம் இருந்தே தங்களை காப்பாற்ற வேண்டிய நிலைக்கு பெண்களைத் தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், காமுகர்களாக மாறிய காவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வேலியே பயிரை மேய்வது போன்று, பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையினரே இளம்பெண்னை வன்கொடுமை செய்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.