பெரம்பலூரில் சட்டவிரோதமாக விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டம் வெண்பாவூர் கிராமத்தின் கிழக்குப் பகுதியில் வனப்பகுதியை ஒட்டிய பல்வேறு விவசாய நிலங்களில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. காட்டுப்பன்றி, மயில், மான் ஆகியவை விளைநிலங்களை சேதப்படுத்துவதால் அந்த பகுதியில் காட்டு விலங்குகள் நுழைவதை தடுப்பதற்காக பெரியசாமி என்பவர் தன்னுடைய வயலை சுற்றி சட்டவிரோதமாக மின்வேலி ஒன்றை அமைத்துள்ளார்.
இந்நிலையில் மருது என்பவரின் மகன் பெரியசாமி (62) அதேபோல் அதே ஊரைச் சேர்ந்த செல்லம்மாள் (55) என்ற இருவரும் தாங்கள் பயிரிட்டிருந்த மக்காச்சோளப் பயர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் ரங்கராஜனுக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் கொடுத்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த இருவரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டவிரோதமாக மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் வெண்பாவூர் கிராமப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.