வேலூர் மாவட்டம் ஆர்.என்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஜகான். சதுப்பேரி பகுதியில் உள்ள இவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தை விற்க முடிவு செய்து இதற்காக அதே பகுதியைச் சேர்ந்த அப்துல் லத்தீப், முகமது ஆயூப் பாஷா ஆகியோரிடம் விற்பனைக்கான ஒப்பந்தம் போட்டுள்ளார். இவர்கள் இருவரும் அந்த இடத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதற்காக கருகம்புத்தூரை சேர்ந்த இடைத்தரகர் தியாகராஜன் (வயது 41) என்பவரை அணுகி உள்ளனர்.
கடந்த 2023 முதல் 2025ஆம் ஆண்டு வரை தியாகராஜன் காலம் தாழ்த்தி வந்ததால், நிலத்தை வாங்க இருந்த இருவரும் கொடுத்த அழுத்தத்தின் பேரில் தியாகராஜன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் பிரிவில் பணியாற்றும் அரசு ஊழியர் தமிழ்ச்செல்வன் (வயது 35) என்பவரைத் தொடர்பு கொண்டு வீட்டு மனைகளாக மாற்றுவதற்கான தடை இல்லா சான்று பெற்றுத் தருமாறு கேட்டுள்ளனர். இதற்காகக் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசு ஊழியர் தமிழ்ச்செல்வனும், ஆரணியைச் சேர்ந்த ஜெய் கணேஷ் என்பவரும் வேலூர் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தைப் போலியாக போட்டு போலியான தடை இல்லா சான்று தயாரித்து வழங்கி உள்ளனர். இந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் இது போலியானவை என தெரிய வந்ததைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் இது குறித்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு துறையினர் வழக்கு பதிவு செய்து இடைத்தரகர் தியாகராஜன் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியராகப் பணி செய்து வரும் தமிழ்ச்செல்வனையும், ஜெய் கணேஷ் ஆகிய இருவரைக் கைது செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய இரண்டு பேரைத் தேடி வருகின்றனர்.
Follow Us