வேலூர் மாவட்டம் தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஈரோட்டுக்குத் தோல் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 36 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. 

Advertisment

இதையடுத்து லாரியில் வந்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, வரிமரிச்சான் கிராமத்தைச் சேர்ந்த திருச்செந்துாரன்(47), முத்துக்காளை(30) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 36 கிலோ கஞ்சா பொட்டலம் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து பரதராமி காவல் துறையினர் வழக்‌குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1

இந்தப் பாதையில் இதே போல் ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா கடத்தல், செம்மரக்கட்டை கடத்தல், சாராயம் கடத்தல் என தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காவல்துறையால் சிலரை மட்டுமே பிடிக்க முடிகிறது. பலரும் காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளுக்கு லஞ்சம் தந்து விட்டோம் என போலீசாரின் கண்ணில் மண்ணை தூவி விட்டும் இந்த வழியில் சட்டவிரோத காரியங்களைச் செய்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.