விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியில் பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த கோவிலில் ராஜபாளையத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து (வயது 50), சங்கரபாண்டியன் (வயது 65)  மற்றும் மாடசாமி ஆகிய மூவர் காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர். அந்த வகையில் மாடசாமி நேற்று முன்தினம் (10.11.2025) பகலில் வேலை பார்த்துவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.

Advertisment

அதே சமயம் நேற்று முன்தினம் மாலை பேச்சிமுத்து, சங்கரபாண்டியன் இருவரும் பணிக்கு வந்தனர். இதனையடுத்து நேற்று (11.11.2025) காலை 6 மணியளவில், அவர்கள் இருவரையும் பணியில் இருந்து மாற்றி விடுவதற்காக மாடசாமி கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது கோவில் கதவின் கீழே உள்ள சிறிய கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் காவலாளிகள் இருவரும் கோவிலின் உள்ளே வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இது குறித்து உடனடியாக கோயில் ஊழியர்கள் மூலமாக காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கோயிலில் ஆய்வு செய்தனர். 

Advertisment

அதில் கோயிலில் இருந்த உண்டியலை உடைக்க முயற்சி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு புறம் இருவரது உடலையும் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உண்டியல் திருட்டைத் தடுக்க முயன்றபோது காவலர்கள் கொள்ளையர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். ராஜபாளையம் அருகே காவலாளிகள் இருவர் கோவிலுக்குள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட அப்பகுதி மக்கள் மத்தியில் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

inves

இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். அதன் அடிப்படையில் இன்று (12.11.2025) அதிகாலையில் சேத்தூர் போலீசார் நாகராஜ் என்பவரைக் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் விசாரணை தொடர்பாக அவரை சம்பவம் நடைபெற்ற கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்குச் சார்பு ஆய்வாளரை, நாகராஜ் தள்ளி விட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். இதனைக் கண்டு உடனே சுதாரித்த காவல் ஆய்வாளர், அவரை பிடிப்பதற்காகக் காலில் சுட்டு உள்ளார்.

Advertisment

இதனால் நாகராஜ் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு ராஜபாளையம்  அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் இவர் மட்டும் ஈடுபட்டாரா அல்லது வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்குள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.