நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை காரக்குண்ணு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். இவரது நண்பர் ராபி. இவர்கள் இருவரும் வழக்கம்போல் நேற்று (08.03.2026) வேலைக்குச் சென்றுள்ளனர். அதன் பின்னர் இவர்கள் இருவரும் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவர்களது உறவினர்கள் இன்று (09.03.2026) காலை அவர்களைத் தேடிச் சென்றனர்.
அப்போது, அவர்களது கிராமத்திற்குச் செல்லும் சாலையில் உள்ள தோட்டம் ஒன்றில் இருவரும் யானை தாக்கி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இருவரது உடல்களை மீட்க முயன்றனர். ஆனால், அங்குத் திரண்ட 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அவர்களது உடல்களை எடுக்க விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இதற்கு வனத்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர். தீர்வு கிடைக்கும் வரை உடல்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதியாகக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராடியதால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவியது. காட்டு யானை தாக்கியதில் நண்பர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us