தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் அருகே உள்ள பண்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவருக்கு மாரிபாண்டி (36), அருள்ராஜ் (30), வேல்முருகன் என்ற மூன்று மகன்களும், மூன்று மகள்களும் உள்ளனர். இந்நிலையில், ஜூலை 28-ம் தேதி முதல் அருள்ராஜைக் காணவில்லை. அதையடுத்து, தனது அண்ணனை காணவில்லை என்று வேல்முருகன் தெர்மல் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அருள்ராஜைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், 31-ம் தேதி இரவு, பண்டுக்கரை பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நாய்கள் நீண்ட நேரமாகக் குரைத்து சுற்றி வந்தன. அவ்வழியாகச் சென்றவர்கள் கவனித்தபோது, மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு கை வெளியே தெரிந்தது. நாய்கள் அதைக் கடித்து இழுத்ததைக் கண்ட பொதுமக்கள், தெர்மல் நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, அது ஆண் ஒருவரின் கை என்பதைக் கண்டறிந்தனர். மேலும், அது மாயமான அருள்ராஜாக இருக்கலாம் என சந்தேகித்தனர். இதற்கிடையே, அருள்ராஜின் அண்ணன் மாரிபாண்டியும் மாயமானது தெரியவந்தது.
இதையடுத்து, தூத்துக்குடி டவுன் ஏ.எஸ்.பி. மதன், தெர்மல் நகர் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி, முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, தாசில்தார் முரளிதரன், ஆர்.ஐ. செல்வலட்சுமி, வி.ஏ.ஓ. பிரேமலதா உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். இரவு நேரமாகிவிட்டதால், அந்த இடத்தைத் தோண்டாமல் பலத்த காவல்துறைப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டது.
மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை, தாசில்தார் முரளிதரன் முன்னிலையில் கை தெரிந்த இடத்தில் தோண்டும் பணி தொடங்கியது. அப்போது, முதலில் அருள்ராஜின் அண்ணன் மாரிபாண்டியின் உடல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், தொடர்ந்து தோண்டியபோது, அதே இடத்தில் அருள்ராஜின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இரு உடல்களும் வெளியே எடுக்கப்பட்டு, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உதயகுமார், அபிராமி மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னிலையில் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ரிதன், முகம்மது மீரான், சங்கர், சதீஷ், முனீஸ்வரன், லிங்கராஜ் என்கிற காளிராஜ் ஆகிய 6 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ரிதனின் சகோதரர் காசிபாண்டியன் சில மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டதால், ரிதனுக்கும் மாரிபாண்டி குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.
கடந்த 27-ம் தேதி மதியம், பண்டுக்கரை உப்பாற்று ஓடை பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, ரிதன் கும்பலுக்கும், அங்கு வந்த மாரிபாண்டி, அருள்ராஜ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ரிதன் கும்பல், அன்று இரவு மாரிபாண்டியின் வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்து விட்டு வந்தனர். அதன் பிறகு, வீட்டை விட்டு வெளியே சென்ற மாரிபாண்டியும் அருள்ராஜும் வீடு திரும்பவில்லை.
மாரிபாண்டி அடிக்கடி வெளியூர் சென்று 10 நாட்களுக்குப் பிறகு திரும்புவது வழக்கம் என்பதால், அவரை குடும்பத்தினர் தேடவில்லை. ஆனால், கண்பார்வை பாதிக்கப்பட்ட அருள்ராஜ் மறுநாள் இரவு வரை வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது சகோதரர் வேல்முருகன் 28-ம் தேதி தெர்மல் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். குடும்பத்தினர் அவர்கள் வழக்கமாகச் செல்லும் இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
விசாரணையில், ரிதன் கும்பல் அருள்ராஜையும் மாரிபாண்டியையும் கடத்தி, உப்பாற்று ஓடை பகுதியில் அடித்துக் கொலை செய்து, சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் குழி தோண்டி இருவரையும் புதைத்தது தெரியவந்தது. சுமார் 3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட மாரிபாண்டியின் கையை ஜூலை 31-ம் தேதி மாலை தெருநாய்கள் கவ்வி இழுத்ததால் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமான ரிதன், முகமதுமீரான், சங்கர், முனீஸ்வரன், காளிராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார், சதீசை தேடி வருகின்றனர்.
முன்விரோதம் மற்றும் போதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணன்-தம்பியைக் கொலை செய்து புதைத்த இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி