சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியின் போது கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுராஜ் (37) என்ற இளைஞர் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும், வழியிலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுராஜின் மனைவியும் உறவினர்களும் கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது. சுராஜின் உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக அவரது நன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த சுராஜின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தவெக சேலம் மாவட்டச் செயலாளர் பார்த்திபன் நேரில் சென்றிருந்தார். அப்போது அவரிடம் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க முயன்றபோது, பார்த்திபனுடன் வந்திருந்த தவெக நிர்வாகி ஒருவர் கேள்வி கேட்ட செய்தியாளரைத் தாக்க முயன்றுள்ளார். மேலும் செய்தியாளரின் வாகனத்தின் மீது ஏறி அடாவடி செய்திருக்கிறார். கோபத்தில் கண்ணாடியை உடைத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு செய்தியாளர்களுடன் தவெகவினர் வாக்குவாதம் செய்ததோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே விஜய்யின் கரூர் சம்பவத்தில் அப்பாவி மக்கள் 41 பேர் இறந்துபோனார்கள். அந்த சம்பவத்தின் வடுக்கள் கூட இன்னும் மறையாத நிலையில், தற்போது அதேபோன்று விஜய் நிகழ்ச்சியில் மற்றொரு துயர சம்பவம் அரங்கேறியிருப்பது மேலும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது நடத்தப்படும் அத்துமீறல்களும் அடாவடி சம்பவங்களும் பொதுமக்களை பீதியடையச் செய்கின்றன.
இது போன்ற அத்துமீறல்கள் தொடர்ந்தால், அரசியல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக விவாதிக்கும் சூழல் பாதிக்கப்படும். எனவே, அரசியல் கட்சிகள் தங்கள் நிர்வாகிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/att-2026-02-13-17-44-24.jpg)