தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (13.09.2025) திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரத்தியேக பிரச்சார வாகனம் வடிவமைக்கப்பட்டது.

Advertisment

திருச்சி காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்ற இருக்கும் நிலையில் அதிகாலையில் இருந்தே ஏராளமான ரசிகர்கள் அந்த பகுதியில் கூடி உள்ளனர். அந்த பகுதியில் வரும் வாகனங்கள் பேருந்துகளில் செல்பவர்களிடம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்கு செலுத்துங்கள் என்று கோஷமிட்டு வருகின்றனர். விஜய் வரவேற்பதற்காக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை நிபந்தனைகளில் வரவேற்பு பேனர்கள் வைக்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி பேனர்கள் கட்டப்பட்டுள்ளது. சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியத்தில் கட்சியின் கொடிகள் கட்டப்பட்டுள்ளது. திருச்சியில் உரையாற்றிய பிறகு அங்கிருந்து அரியலூர் செல்லும் விஜய் குன்னம், பெரம்பலூர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.

சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் திருச்சி வந்தடைந்த விஜய் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட  பேருந்து மூலம் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தார். அவரது வாகனத்தை தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடர்ந்து ஓடினர்.  இதனால் பேருந்து ஊர்ந்து சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள் மயக்கமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயக்கமடைந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தூக்கிக்கொண்டு ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் போலீசாரின் கட்டுப்பாடுகளை விஜய்யின் ரசிகர்கள் பின்பற்றாத சூழல் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் கட்டுப்பாடுகளை மீறி விஜய்யின் பேருந்தை இருசக்கர வாகனங்களில் ரசிகர்கள் தொடர்ந்து வருகின்றனர். விஜய் உரையாற்றவுள்ள இடத்தில் உள்ள எம்ஜிஆர் சிலை இரும்பு கூடத்தின் மீது ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விஜய்யின் தொண்டர்கள் ஏறினர். போலீசார் சொல்லியும் கேட்காத நிலை அங்கு பரபரப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.