தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (27-09-25) மூன்றாவது கட்டமாக நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்குச் சென்றார். அப்போது அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக பரப்புரையில் பங்கேற்ற 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனிடையே, கூட்டத்தில் மயங்கி விழுந்தவர்களை தூக்கிச்செல்ல ஆம்புலன்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளதால் கரூர் அரசு மருத்துவமனையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும், இதில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த துயரச் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அறிவுத்துள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவியையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கரூர் பரப்புரையில் 10 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று தவெக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்டு அளித்திருந்த மனு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தவெக சார்பில் காவல்துறையிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘எங்கள் கழகத் தலைவர் விஜய் சாலை மார்க்கமாக கரூர்க்கு வருகை புரிந்து மக்களை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது கீழ்க்கண்ட இடத்தில் ப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் கரூர் மாவட்டப் பகுதிகளில் கட்சிக் கொடிகள் அமைத்து ஒலி/ஒளி அமைத்து பேசவுள்ளார். மேற்படி லைட் ஹவுஸ் ரவுண்டானா இடத்தை 23.09.2025 அன்று பொறியாளரை வைத்து அளவீடு செய்ததில் 1,20,000 சதுரடி காலியிடமாக உள்ளது. இதில் 60 ஆயிரம் நபர்கள் வரை நின்று பார்வையிட வாய்ப்பு உள்ளது. நாங்கள் இக்கூட்டத்திற்கு ஏதிர் பார்க்கப்படும் நபர்கள் 10,000 பேர்வரை ஆகும். (இத்துடன் பொறியாளர் அளந்து கொடுத்த சான்று மற்றும் வரைபடம் இணைக்கப்பட்டுள்ளது). இந்த நிகழ்ச்சிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கி எங்கள் கழகத் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் பரப்புரையில் 10 ஆயிரம் பேர் தான் பங்கேற்பார்கள் என்று தெரிவித்து தவெக காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், காவல்துறை விதித்த அனைத்து நிபந்தனைகளும் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு துயரச் சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.