Advertisment

“மை டியர் சி.எம். சார் நீங்களா? நானா? என்று பார்த்துவிடுவோம்” - விஜய் சவால்

1

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையான இன்று(20.09.2025), நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அவர், நாகை புதூர் அண்ணா சிலை அருகே மக்கள் மத்தியில் உரையாற்றினர்.

Advertisment

அப்போது பேசிய விஜய், “உங்கள் அனைவருக்கும் ஒரு மீனவ நண்பனாக எனது அன்பு வணக்கம். கப்பலில் இருந்து வந்து இறங்கும் பொருட்களை விற்பதற்காக அந்தி கடைகள் நாகப்பட்டினத்தில் இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மீன்பிடித் தொழிலோ, விவசாயத் தொழிலோ, எந்தப் பக்கம் திரும்பினாலும் உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாமல், மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சிறப்பு வணக்கங்கள். தமிழ்நாட்டில் மின் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இருப்பது நமது நாகப்பட்டினம் துறைமுகம்.

ஆனால், அங்கு நவீன வசதிகளுடன் கூடிய பதப்படுத்தும் இயந்திரங்கள் இல்லை. அதுமட்டுமல்லாமல், அடிப்படை வசதிகள் இன்றி அதிகளவு குடிசைப் பகுதிகள் இருப்பதும் நமது நாகப்பட்டினம் மாவட்டத்தில்தான். இந்த முன்னேற்றத்திற்கெல்லாம் எங்கள் ஆட்சியே சாட்சி என்று அடுக்குமொழியில் அவர்கள் பேசி, நாம் கேட்டு காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆண்டது போதாதா? இப்போது நம் மக்கள் தவிக்கும் நிலை போதாதா? இலங்கைக் கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும், அவர்கள் இழக்கப்படும் அநீதிகளையும் பற்றி மதுரை மாநாட்டிலேயே பேசியிருந்தேன். அது ஒரு தவறா? மீனவர்களுக்காக நிற்பதும், அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் நமது கடமை. நான் இன்றைக்கு நேற்றிய மீணவர்களுக்காக குரல் கொடுக்கிறேன்..?  

14 ஆண்டுகளுக்கு முன்பு, 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி, நமது மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இதே மண்ணில் பொதுக்கூட்டம் நடத்தினேன். இந்த விஜய் களத்துக்கு வருவது புதிதல்ல. எப்போதோ வந்துவிட்டேன். அப்போது  எல்லாம் விஜய் மக்கள் இயக்கமாக வந்து நின்றோம். ஆனால், இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியாகக் களத்திற்கு வந்து நிற்கிறோம். இரண்டுக்கும் இதுதான் வித்தியாசம். என்றைக்கும் மக்களுடன் மக்கள் பணியில் இருப்பதுதான் எங்களது பணி. இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி. மீனவர்களுக்காகக் குரல் கொடுக்கும் அதே சமயத்தில், நமது தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களைப் பற்றியும் பேசியாக வேண்டும். அவர்கள் இலங்கையில் இருந்தாலும், உலகில் எந்த மூலையில் இருந்தாலும், தாய் பாசம் காட்டிய தலைவனை இழந்து தவிக்கும் அவர்களுக்காகவும் நாம் குரல் கொடுத்தே ஆக வேண்டும். அது நம் கடமைதான். மீனவர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் ஈழத் தமிழர்களின் வாழ்வும், அவர்களது உரிமையும் நமக்கு முக்கியம்.

Advertisment

மீனவர்களின் துயரத்தைப் பார்த்துவிட்டு, நீண்ட கடிதம் எழுதிவிட்டு, அமைதியாகப் போவதற்கு நாம் கபட நாடக திமுக அரசு கிடையாது. மற்ற மீனவர்கள் என்றால் இந்திய மீனவர்கள், நம் மீனவர்கள் என்றால் தமிழக மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜக அரசும் கிடையாது. ஒரு பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு கொண்டு வருவதுதான் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் அஜெண்டா.  தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்தைப் பற்றிபார்ப்போம். இங்கு மண்ணைப் பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாமல் இருக்கும். கடலோர கிராமங்களை மீன் அரிப்பில் இருந்து பாதுகாக்கும் அலையாத்திக் காடுகளை அழிப்பதைத் தடுத்து, அதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். ஆனால், நமது அரசாங்கத்திற்கு இதைவிட முக்கியமான வேலை ஒன்று உள்ளது. அது, சொந்தக் குடும்பத்தின் வளர்ச்சியும், சுயநலமும் தான். இங்கு மக்கள் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள்.

அதற்கு, மக்களின் தாகத்தைத் தணிக்க காவிரி நீரைக் கொண்டுவரலாம். ஆனால், அவர்கள் கொண்டுவந்தார்களா? இவ்வளவு கடல் சார்ந்த ஊரில் ஒரு நவீன மெரைன் கல்லூரி கொண்டுவரலாம். கொண்டுவந்தார்களா? மீன் தொழிற்சாலையாவது அமைக்கலாம். அமைத்தார்களா? குறைந்தபட்சம், அதிக பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில்  தொழில் வளத்தைப் பெருக்கியிருக்கலாம். அதியாவது செய்தார்களா? ஒவ்வொரு முறையும் வெளிநாட்டிற்குச் சென்று, இவ்வளவு கோடி முதலீடு, அவ்வளவு கோடி முதலீடு என்று முதலமைச்சர் சிரித்துக்கொண்டே சொல்கிறார். சி.எம். சார், மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்: வெளிநாட்டு முதலீடா, அல்லது வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கு முதலீடா, அல்லது உங்கள் குடும்பத்தின் முதலீடு வெளிநாட்டிற்குப் போகிறதா? வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை போன்ற சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தலாம். அப்படிச் செய்தால் உங்களுக்கு என்ன குறைந்துவிடும்? வேதாரண்யத்தில் உப்பு ஏற்றுமதிக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுத்திருக்கலாம். செய்தார்களா? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதற்கு மருத்துவரே இல்லையாம். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கிறார்களா? அதுவும்  செய்யவில்லை.

நாகப்பட்டினம் ரயில் நிலைய வேலைகளை விரைவாக முடித்திருக்கலாம். அதையாவது செய்தார்களா? ஏற்கெனவே இருந்த ஸ்டீல் ரோல் மற்றும் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறந்தால், நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏன் திமுக அரசு இதைப் பற்றி யோசிக்கவில்லை? மேலக்கோட்டை வாசலில் NH மேம்பாலம் கட்டி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை மேம்படுத்தலாம். அதையாவது செய்தார்களா? தஞ்சாவூர் முதல் நாகை வரையிலான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதுவரை முடியவில்லை. அதை விரைவுபடுத்தி முடித்திருக்கலாம். அதையாவது செய்தார்களா? முக்கியமாக, மழையில் நனைந்து  நெல் மூட்டைகளை  பாதுகாக்க ஒரு குடோனை கட்டிச் சரிசெய்திருக்கலாம். அதையாவது செய்தார்களா? முன்பு திமுகவினர் வந்து, “செய்வோம், செய்வோம்” என்று சொன்னார்களே, செய்தார்களா? எதையும் செய்யாமல், அனைத்தையும் செய்ததாகப் பெருமையாகப் பேசுகிறார்கள்.

கடந்த முறை திருச்சி, அரியலூர் சென்றிருந்தேன். பெரம்பலூர் செல்ல வேண்டியிருந்தது, ஆனால் சில கட்டுப்பாடுகளால் செல்ல முடியவில்லை. அதற்காக, பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் உங்களைத் தேடி வருவேன். நாம் இந்தப் பரப்புரையைத் தொடங்கியபோது, எல்லோரும் “ஏன் சனிக்கிழமை தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்டார்கள். அது வேறொன்றுமில்லை. உங்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது, உங்கள் வேலைகள் பாதிக்கப்படக் கூடாது என்று வார இறுதியில் தேர்ந்தெடுத்தோம். விடுமுறை நாட்களிலும், ஓய்வு நாட்களிலும் உங்களைச் சந்திக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். ஆனால், பாருங்கள், நமது மக்களையும், சொந்தங்களையும் சந்திப்பதற்கு எத்தனை கட்டுப்பாடுகள்! இந்த இடத்தில் அனுமதி இல்லை, அந்த இடத்தில் அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள். காரணம் கேட்டால், சொத்தையாக இருக்கும். “அங்கு பேசக் கூடாது, இங்கு பேசக் கூடாது, ஐந்து நிமிடம் மட்டுமே பேச வேண்டும்” என்று கூறுகிறார்கள். ஆனால், நான் பேசுவது மூன்று நிமிடமே. அதிலும், “இதைப் பேசக் கூடாது, அதைப் பேசக் கூடாது” என்றால், நான் எதைப் பேசுவது? 

அரியலூர் சென்றபோது, அந்தப் பகுதியை நெருங்குவதற்கு முன்பு மின்சாரத்தை துண்டித்துவிட்டார்கள். திருச்சியில் பேச ஆரம்பித்தபோது, ஸ்பீக்கருக்கு சென்ற  ஒயரை வெட்டிவிட்டார்கள். நான் தெரியாமல் கேட்கிறேன், முதலமைச்சர் சார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்லது பிரதமரோ இங்கு வந்தால், இப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பீர்களா? மின்சாரத்தை துண்டிப்பீர்களா? கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள், உங்களால் முடியாது.  ஆனால், நீங்கள் மறைமுக உறவுக்காரர்கள் இல்லையா? இதாவது பரவாயில்லை, இதைத் தாண்டி, “பேருந்து  உள்ளேயே இருக்க வேண்டும், வெளியே இறங்கக் கூடாது, கையை இவ்வளவு உயரம் மட்டுமே தூக்க வேண்டும், மக்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது, கை அசைக்கக் கூடாது” என்று எத்தனை கட்டுப்பாடுகள்! நானும் ஏதோ என்று நினைத்தேன், ஆனால் இது செம காமெடியாக இருக்கிறது. நான் இவற்றை எல்லாம் என்ஜாய் செய்கிறேன்.

நேரடியாகக் கேட்கிறேன், முதலமைச்சர் சார், என்னை மிரட்டப் பார்க்கிறீர்களா? இந்த விஜய் அதற்கு ஆளில்லை, சார். கொள்கையைப் பேரளவுக்கு மட்டும் வைத்துக்கொண்டு, குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருக்கும்போது, சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? நாங்கள் மக்கள் நிம்மதியாகப் நின்று பார்க்க வேண்டும் என்று ஒரு இடத்தை தேர்வு செய்து, அதற்குத்தான் அனுமதி கேட்டோம். ஆனால், நீங்கள் மக்கள் நெருக்கடியில் இருக்கும் ஒரு இடத்தில் அனுமதி தருகிறீர்கள். உங்கள் எண்ணம் என்ன, சார்? நான் மக்களைச் சந்திக்கக் கூடாது, பார்க்கக் கூடாது, குரல் கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?

ஒரு அரசியல் கட்சித் தலைவனாக என்னை மறந்துவிடுங்கள். தமிழ்நாட்டு மண்ணின் ஒரு மகனாக, என் மக்களை, என் குடும்பத்தைச் சந்திக்கச் சென்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்போதும் தடை போடுவீர்களா? வேண்டாம், சார், இந்த அடக்குமுறை அராஜக அரசியல் வேண்டாம். நாங்கள் தனியாள் இல்லை, சார். மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம், சார். மறுபடியும் கூறுகிறேன், 2026-ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி: ஒன்று திமுக, மற்றொன்று டிவிகே.  ஆகா, பூச்சாண்டி வேலைகளைக் காட்டுவதை விட்டுவிட்டு, தில்லாக, கெத்தாக தேர்தலைச் சந்திக்க வாங்க, சார். கொள்கையைப் பேரளவுக்கு மட்டும் வைத்துக்கொண்டு, குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் நீங்களா, அல்லது தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவனாக இருக்கும் நானா என்று பார்த்துவிடலாம். இனியும் இப்படியான கட்டுப்பாடுகள் விதித்தால், நான் நேரடியாக மக்களிடம் அனுமதி கேட்டுவிடுவேன்.

மக்களே, நீங்கள் சொல்லுங்கள்: நான் உங்களைச் சந்திக்க வரக் கூடாதா? உங்களிடம் பேசக் கூடாதா? உங்கள் குறைகளைக் கேட்கக் கூடாதா? உங்களுக்காகக் குரல் கொடுக்கக் கூடாதா? இந்த திமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? உங்கள் நன்மைக்காக நமது தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைய வேண்டுமா? கேட்டாச்சா, மை டியர்.....? நான் பாசமாக, ஆசையாக அவரைக் கூப்பிட்டால், அவருக்கு பிடிக்கவில்லை. சரி, கேட்டாச்சா, சிஎம் சார்? இந்தப் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாமல் துரத்திக் கொண்டே இருக்கும். தைரியமாக இருங்கள், வெற்றி நிச்சயம்!” என்று கூறினார்.

mk stalin tvk vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe