Tvk vijay speech at election campaign rally in erode
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (18-12-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரச்சார வாகனத்தில் நின்றபடியே பேசிய தவெக தலைவர் விஜய், “பொதுவாக நல்ல காரியம் தொடங்குவதற்கு முன்பு மஞ்சள் எடுத்து வைத்து துவங்குவார்கள். நம் வீட்டில் உள்ள பெண்கள் கூட, நாம் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக மஞ்சள் புடவை கட்டி தான் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள். மஞ்சள் என்றாலே தனி வைப். நம் கொடியில் கூட மஞ்சள் இருக்கிறது. அந்த மாதிரி மங்களகரமான மஞ்சள் விளைகிற பூமி தான் இந்த ஈரோடு பூமி. இந்த ஈரோடு மண் விவசாயத்துக்கும் பேர் போன மண். இங்கு நடக்கும் விவசாயத்துக்கு மிக முக்கியமான கவசமாக இருப்பது என்ன தெரியுமா? காலிங்கயராயன் அணை, காலிங்கயராயன் கால்வாய். இந்த விஷயங்களும் கட்டியதில் உணர்வுபூர்வமான நிறைய விஷயங்கள் இருக்கிறது.
பெற்ற அம்மா கொடுக்கும் தைரியத்தை விட எதுவும் இருக்காது. அதை வைத்து ஒரு மனிதன் எதையும் சாதிக்க முடியும். அதே தைரியத்தை தான் நீங்கள் எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அதே துணையாக என்கூட நிற்கிறீர்கள். இதை எப்படி பிரித்துவிடலாம், எப்படி கெடுக்கலாம், விஜய் மீது என்னவெல்லாம் அவதூறுகளை சொல்லி மக்களை நம்ப வைக்கலாம், என்னவெல்லாம் விஜய் மீது சூழ்ச்சிகளை செய்து மக்களை நம்ப வைக்கலாம் என சில சூழ்ச்சிக்கார கூட்டம் இதை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், இது இன்னைக்கு நேற்றைக்கு வந்த உறவு இல்லை, கிட்டத்தட்ட 33 வருசத்துக்கு முன்னாடியே இருந்த உறவு. நான் சினிமாவுக்கு வந்த போது எனக்கு வயது 10. அப்போது இருந்தே இந்த உறவு தொடங்கிவிட்டது என அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. அதனால் நீங்கள் என்ன முயற்சி செய்தாலும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கிற இந்த விஜய்யை மக்கள் ஒருநாளும் கைவிட மாட்டார்கள். மக்கள் கூடவே நிற்பார்கள் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியோடவே இருப்பேன்.
அத்திக்கடவு அவினாசி திட்டத்தை இன்னும் விரிவுப்படுத்தினால், 3 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும். எத்தனையோ லட்ச விவசாய நிலங்களில் விவசாயம் நடத்தினால் எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும். ஏன் அதையெல்லாம் பண்ண மாட்டிக்கிறீங்க. வள்ளுவர் கோட்டம் மீதுள்ள அக்கறையை மக்கள் மீது ஏன் காட்ட மாட்டிக்கிறீங்க. அரசாங்கம் நடத்துகிறார்களா? இல்லை கண்காட்சி நடத்துகிறார்களா?. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் மக்களை பற்றி எதுவும் யோசிப்பதில்லை. ஆனால் அந்த காலத்திலேயே தண்ணீரைப் பற்றி, அணை கட்டுவதைப் பற்றி கால்வாய் வெட்டுவதைப் பற்றி இதையெல்லாம் யோசித்த காலிங்கயராயனுக்கு கோடி கும்புடு போட்டாலும் பத்தாது. இப்படி அந்த காலத்தில் ஒரு ஹீரோவைப் பற்றி பேசிவிட்டு, 19, 20ஆம் நூற்றாண்டில் இருந்த ஒரு ஹீரோவைப் பற்றி நாம் பேசியே ஆகணும். ஆம் நம் ஈரோடு கடப்பாறை தான். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திருப்பிபோட்ட சீர்திருத்த நெம்புகோல். ஈரோடு மாவட்டத்தில் பிறந்த அவர் தான், இந்தியாவுக்கே இடஒதுக்கீடு சம்பந்தமாக அரசியல் சீர்த்திருத்த போராட்டத்தை நடத்தியவர் நம் தந்தை பெரியார். 100 வருடத்திற்கு முன்பே வகுப்புவாரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று சொன்னவர். நம்முடைய கொள்கை தலைவர்.
அப்போது அண்ணாவும், எம்.ஜி.ஆரும் யார்? பெரியாரிடம் இருந்து எங்களுக்கு தேவையான கொள்கைகளை எடுத்துகொண்டோம். அவரை பின்பற்றி வந்த அண்ணா மற்றும் எம்.ஜி.ஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டோம். அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதால் யாரும் கம்ப்ளைண்ட் செய்ய முடியாது. அண்ணா எங்களுடையது, எம்.ஜி.ஆர் எங்களுடையது, நீங்கள் எடுத்துக்கொள்ள கூடாது என யாரும் இங்கு அழுதுகொண்டு இருக்க முடியாது. நாங்கள் ஒரு வழியில் அரசியல் செய்து போய் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தான் தவெக ஒரு பொருட்டே இல்லலே, அப்புறம் ஏன் கதறுகிறீர்கள். அப்புறம் ஏன் புலம்பி தள்ளிட்டு இருக்கிறீங்க. எனக்கு பயமில்லை, எனக்கு பயமில்லை என சின்ன பசங்க சொல்லி நடந்து செல்வது போல் இது இருக்கிறது. முதலில் மண்டையில் உள்ள கொண்டையை மறைங்க. மாறுவேஷத்தில் மரு வைத்துக்கொண்டு மீடியோ ஆளு, ரோடியோ ஆளு என்று வருகிறார்கள். இதெல்லாம் இவர்கள் ஆளு தான். மக்கள் எல்லோரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நீங்கள் கொள்ளையடித்து வைத்திருக்கு காசு தான் துணை, ஆனால் எனக்கு என் மேல் எல்லையில்லா பாசம் வைத்திருக்கிற இந்த மாஸு தான் துணை.
Follow Us