சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாகப் பல மாதங்களாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இத்தகைய சூழலில் தான் மூச்சுத் திணறல் காரணமாகக் கடந்த 1ஆம் தேதி நல்லகண்ணு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்படி கடந்த 25 நாட்களாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நேற்று முன்தினம் (23.02.2026) இரவு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் நல்லகண்ணுஅதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நல்லகண்ணுவின் உடல் இன்று மாலை 4:30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள சிபிஐ கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.
அதன்படி நாளை (26.02.2026) மாலை 4 மணி வரை அங்கு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அதன் பின்னர், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு அவரது விருப்பப்படியே உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.
அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணுவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us