Advertisment

“போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்!

tvk-vijay-1

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் பொருளாதாரப் பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு மிக மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். தங்கள் எதிர்காலம் குறித்த கேள்விகளோடும் கவலைகளோடும் இருக்கும் நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் ஒவ்வொருவரோடும் தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம். 

Advertisment

இந்தியாவின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் பெருமையாகத் தமிழ்நாடு எப்போதும் இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் நமது மாநிலம் கிட்டத்தட்ட 10% அளவிற்குப் பங்களிக்கிறது. இது நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதி அளவுகளில் ஒன்றாகும். ஜவுளி, ஆடை, தோல் மற்றும் காலணிகள், ஆட்டோமொபைல்கள், ஆட்டோ உதிரி பாகங்கள், இயந்திரங்கள். ரசாயனங்கள், மின்னணுப் பொருட்கள், கடல் உணவு வகைகள், நகைகள் உள்ளிட்டவை வரை தமிழ்நாட்டின் தொழில்கள், லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்நிலையில் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்காவின் 50 சதவீதம் என்ற புதிய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் தமிழக ஏற்றுமதியாளர்கள். தாங்கள் மேற்கொண்டு வரும் ஏற்றுமதித் தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

Advertisment

ஏனெனில், வங்கதேசம் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகள் மீது அமெரிக்கா இந்த அளவிற்கு வரியை விதிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மற்ற நாட்டுப் பொருட்களின் விலை குறைவாகவும். அதே நேரத்தில் 50 சதவீதம் வரி விதிப்பிற்கு உட்படுத்தப்பட்ட இந்தியப் பொருட்களின் விலை அதிகமாகவும் இருக்கும். வரி அதிகமான காரணத்தினால் அமெரிக்க வணிகர்கள் இந்தியப் பொருட்களை வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். இது தமிழக ஏற்றுமதியாளர்களின் தலையில் விழுந்த மிகப் பெரிய 'இடி' ஆகும். இந்த வரி விதிப்பு நடைமுறையால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வேலைகள் ஆபத்தில் உள்ளன. திருப்பூரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகள், கோயம்புத்தூரில் உள்ள ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் மீனவர்கள் ஆகியோரின் வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு. நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பைப் பெறும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்புக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளனர். 

இதனால் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் தமிழ்நாட்டின் இளைஞர்கள். பெண்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் தான் முதலில் பாதிக்கப்படுவார்கள். இந்தக் கூடுதல் வரிவிதிப்பு அச்சுறுத்தல், சிறிது காலமாகவே இருந்து வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வெளியுறவுக் கொள்கையில் ஒரு முன்முயற்சி எடுத்திருந்தால் இந்தச் சூழ்நிலையைத் தடுத்திருக்க முடியும் என்ற உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவதைத் தவிர்க்க இயலவில்லை. உலகளாவிய தெற்கின் குரல்' என்று ஒன்றிய அரசு பெருமையாகக் கூறிக்கொண்டாலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்த உடனே இந்தியத் தொழில்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாட்டை ஆளுகின்ற திமுக அரசும், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாக்க, எந்த அவசரத் திட்டமோ,  நிவாரண நடவடிக்கைகளோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ இல்லாமல். 'முதலீட்டு உச்சி மாநாடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றிய வெற்று விளம்பரங்களோடு தன்னை நிறுத்திக்கொண்டுள்ளது.

தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவுக்குக் கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகள். 50 சதவீத வரி விதிப்பால் பாதி வழியில் துத்துக்குடிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் கவலை அளிக்கின்றன. ஏனெனில் இதில் பாதிக்கப்படுவது தமிழக ஏற்றுமதியாளர்கள் தான். எனவே, தொழில் மற்றும் வேலைவாய்ப்பினைப் பாதுகாப்பதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது” எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்குக் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 11 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 

tn govt union govt export tax usa America tariff
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe