தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன..
இந்நிலையில் 34 பேர் கொண்ட தவெக தேர்தல் பிரச்சார மாநில சட்டப் பாதுகாப்புக் குழுவை அமைத்து அக்கட்சித் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'சட்டமன்றத் தேர்தல் பிரசார மாநிலச் சட்டப் பாதுகாப்புக் குழு' நியமிக்கப்படுகிறது. அதில், கட்சியின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், பொருளாளர் வெங்கட்ரமணன், வழக்கறிஞர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், சட்ட ஆலோசனை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், சட்ட ஆலோசனை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சிவசண்முகம் இடம் பெற்றுள்ளனர்.
அதே போன்று சட்ட ஆலோசனை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பாண்டி என்கிற பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் இந்திரா தன்ராஜ் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்குக் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதே சமயம் வரும் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில், தவெக தலைவர் விஜய் வேலூரில் தனது அடுத்த பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தவெக சார்பில் அனுமதி பெறும் நடவடிக்கை துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Follow Us