Tvk Velmurugan interview Photograph: (velmurugan)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 13ஆம் தேதி திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை நேற்று விஜய் கண்டித்திருந்தார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர்.என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது. நமது மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது. தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள்' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் செய்தியாளர்கள் 'தன்னைக் கண்டு திமுக அஞ்சுவதாக' விஜய் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், ''விஜய்க்கு எல்லாம் பயப்படுவதில்லை திமுக. ஆளானப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியையும் நேருவையும் சந்தித்த கட்சி திமுக'' என்றார். மேலும் துணைக் குடியரசு தலைவர் தேர்தல் குறித்த கேள்விக்கு, 'பாஜக சித்தாந்தத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் சி.பி.ராதாகிருஷ்ணன் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர். கொங்கு சீமையில் பிறந்த தமிழர். அவர் துணைக் குடியரசு தலைவரானால் ஒரு தமிழனாக எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி'' என்றார்.