சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்று (13/07/2025) போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் போராட்டமானது நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்துள்ளதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த லாக் அப் மரணங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தமிழக வெற்றி கழகம் முன்னெடுத்துள்ளது.

a4399
Tvk struggle - volunteers fainting Photograph: (tvk)
Advertisment

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள பலர் வெயிலின் தாக்கம் காரணமாக மயக்கம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற தொண்டர்கள் அவர்களை அவர்களுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய் கலந்து கொள்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் காலை 5:30 மணி முதல் பெண்கள் அந்த பகுதியில் குவிந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஒரு பெண் நிர்வாகி வெயிலின் தாக்கம் காரணமாக மயங்கி விழுந்தார். அவருக்கு அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாரும், தமிழக வெற்றிக் கழகம் தொண்டர்களும் அதேபோல் அங்கே இருந்த மருத்துவர் ஒருவரும் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். அதிகப்படியான தொண்டர்கள் குவிந்த நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி அங்கு எட்டுக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மயக்கம் அடைந்த பெண் நிர்வாகி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.