மது போதைக்கு அடிமையாகி தினம்தினம் பலர் செத்துக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களது குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. குழந்தைகளின் கல்வி காணாமல் போகிறது. படிக்க வேண்டிய வயதில் கூலி வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் வேதனையை காண முடிகிறது. ஆகவேதான் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Advertisment

புதுக்கோட்டை நகரில், டாஸ்மாக் கடைகள் மட்டுமின்றி தற்போது தனியார் பார்களும் பொதுமக்களை ஆட்கொண்டுவிட்டன. இந்த நிலையில்தான் நகரில் 7 டாஸ்மாக் கடைகள் இருந்தும் கூட தனியார் நடத்தும் எஃப்.எல்.2 பார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவற்றை மூட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் போராட்டக் குரல் எழுந்துள்ள நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் நியாஸ் அஹமது தலைமையில், மாவட்டச் செயலாளர் கலையரசன் முன்னிலையில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் முகமது கனி, மாநில கொள்கை விளக்கத் துணைச் செயலாளர் ஈஸ்வரன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்ட மதுப்பாட்டிலுக்கு தாலி கட்டும் போராட்டம் நடைபெற்றது.

Advertisment

போராட்டம் குறித்து மாநில இளைஞரணி செயலாளர் நியாஸ் அஹமது கூறுகையில், “ஏன் இந்தப் போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம் என்றால்...? புதுக்கோட்டை மாநகரத்தில் இருப்பது 42 வார்டுகளே. அதிலும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் முக்கிய இடங்களான புதிய பேருந்து நிலையத்தில் 2 அரசு டாஸ்மாக் கடையுடன் கூடிய பார்களும், டிவிஎஸ் கார்னர் என்று சொல்லப்படும் இடத்தில் 2 டாஸ்மாக் பார்களும், பழைய பேருந்து நிலையம் எதிரில் 1 டாஸ்மாக் பாரும், பழனியப்பா கார்னர் பிஎஸ்என்எல் ஆபீஸ் எதிரில் 1 பாரும், வடக்கு ராஜ வீதி புன்னகை மெடிக்கல் அருகில் 1 டாஸ்மாக் பாரும் இருக்கிறது.

புதுக்கோட்டை நகரத்தில் எங்கு சுற்றினாலும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கும், பொருட்கள் வாங்கவும், மேலும் கோவில்கள், பள்ளிகள் போன்ற இடங்களுக்கும் மேற்கண்ட இடங்களுக்குத்தான் பொதுமக்கள் வர வேண்டும். மேலும் டிவிஎஸ் கார்னர் பகுதி என்று சொல்லப்படும் இடத்தில் 2 டாஸ்மாக் மதுக்கடைகளும், 1 எலைட், FL2 கிளப் என்ற மது கடையும் உள்ளது.

Advertisment

எனவே பொதுமக்களும், சமூக நல ஆர்வலர்களும், அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் இந்த மதுக்கடைகளையே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த மதுக்கடைகளை அகற்ற பல கட்டப் போராட்டங்களையும் நடத்தி வந்துள்ளனர். இந்த மதுக்கடைகள் வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும் FL2 கிளப் பார்கள் டிவிஎஸ் கார்னர் அருகில் 1, புதிய பேருந்து நிலையம் எதிரில் டீம் ஹாஸ்பிடல் பின்புறம் 1, பழைய பேருந்து நிலையம் அருகில் HDFC Bank எதிரில் 1, மற்றும் FL3 AAA பார் டிவிஎஸ் கார்னரிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் தமிழ்நாடு ஹோட்டல் என்று சொல்லப்படும் இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது காந்தி நகர், போஸ் நகர் பகுதியில் உள்ள அசோக் நகர் என்ற ஏரியாவில் ஹைவே ரோட்டில் எதிரே ஒரு புதிய பார் FL2 மனமகிழ் மன்றம் மக்களின் போராட்டத்திற்கும், நாம் நீதிமன்றங்களை நாடிய பிறகும் தயாராகி திறக்கப்பட்டுள்ளது. மேலும், கிராம ஊராட்சி பகுதியிலும் சில மதுபானக் கடைகள் ஆலங்குடி ரோடு கேப்பரையிலும் (FL2) திறக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போக்கு வாழ்வாதாரம் இன்றித் தவிக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், குடும்ப வாழ்வாதாரத்தையும் வஞ்சிக்கும் போக்காக மக்கள் கருதுகிறோம்.

மேலும் தற்போது திறக்கப்பட்ட அசோக் நகர் மனமகிழ் மன்றத்தை உடனே தாங்கள் வழங்கிய அனுமதியை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும். இன்னும் பல இடங்களில் வர முயற்சி செய்யும் நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது. மேற்படி ஏதேனும் அனுமதி வழங்கினாலும் அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கின்றோம். அதேபோல, சில போலீசாரே ஒரு எஃப்.எல்.2 மதுக்கடையில் மது விற்பனையும் செய்து வரும் தகவல்களும், வீடியோ பதிவுகளும் வெளியாகி மக்களை அச்சுறுத்துகிறது என்பதுதான் வேதனையானது” என்றார்.