கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்திற்கு வரவழைத்து (27.10.2025) தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். இத்தகைய சூழலில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்கப் புதிதாக 28 பேர் கொண்ட குழுவைத் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியது. இதுகுறித்த பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

Advertisment

அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், துணைப் பொதுச்செயலாளர் ராஜ் மோகன் உள்ளிட்ட 28 பேர் இடம்பெற்றிருந்தனர். இதனையடுத்து இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் விஜய் இல்லாமல், பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் (29.10.2025) நடைபெற்றது.   

Advertisment

இந்நிலையில் த.வெ.க.வின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று (05.11.2025) நடைபெற உள்ளது. அதாவது சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று காலை நடைபெறும் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே அழைப்பு கடிதம் மற்றும் அக்கட்சியின் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.