tvk protests against lock-up incident - police deployed Photograph: (tvk)
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக புகார் தெரிவித்திருந்தார். தொடர்ந்து நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவின் படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர் விசாரணை நடத்தினார். தொடர்ந்து கடந்த 08/07/2025 அன்று இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐக்கு மாற்றிய நிலையில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, 15 ஆம் தேதிக்குள் விசாரணையைத் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
அஜித்குமார் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்று (13/07/2025) போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் போராட்டமானது நடைபெற இருக்கிறது. இதனை ஒட்டி 1,500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்துள்ளதால் அவர்களுக்கான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் நிகழ்ந்த லாக் அப் மரணங்கள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தமிழக வெற்றி கழகம் முன்னெடுத்துள்ளது.