கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை, அன்னை சத்யா தெருவைச் சேர்ந்தவர் 30 வயதான விஜய் செல்வா. இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாகப் பொறுப்பு வகிக்கிறார். அதேபோல், உளுந்தூர்பேட்டை, கார்நேஷன் தெருவைச் சேர்ந்த பாலாஜி, பாமக நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பான பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் செல்வாவிற்கும், பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மேலும் பிரச்சனை பெரிதானதால், இந்த விவகாரம் காவல் நிலையம் வரைச் சென்று, இரு தரப்பு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றன. இந்தச் சூழலில், ஜூலை 23-ஆம் தேதி மாலை, அன்னை சத்யா நகரில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் நிர்வாகி விஜய் செல்வா தலைமையில் அக்கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பாலாஜியின் வீட்டின் முன்பு விஜய் செல்வாவும் அவரது கட்சியினரும் சென்றுள்ளனர்.
இதனால், நிலம் தொடர்பாக மீண்டும் விஜய் செல்வா தரப்பிற்கும் பாலாஜி தரப்பிற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. பின்னர், இது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறியுள்ளது. உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீஸார் இரு தரப்பையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அதனைப் பொருட்படுத்தாத இரு தரப்பினரும் உருட்டுக் கட்டை, கல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இதில் விஜய் செல்வாவிற்கும், பாலாஜியின் சகோதரர் ராஜனுக்கும் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, இரு தரப்பு மோதல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரு தரப்பினரும் உருட்டுக் கட்டைகள் மற்றும் கற்களால் தாக்கிக் கொள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாகப் பரவி வருகிறது.