TVK Petition filed with the Election Commission seeking a common symbol
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர்.
அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது. இது தவிர மற்ற கட்சிகளான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால்,சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் சுற்றுப்பயணம், தேர்தல் பரப்புரை என தீவிரம் காட்டி வருகின்றனர். மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பொதுச் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் 184 சின்னங்கள் பட்டியடலிடும் வேளையில், தங்களுக்கு தேவையான சின்னங்களை குறைந்தபட்சம் 5 முதல் 10 சின்னங்கள் வரை தேர்வு செய்து கட்சிகள் விண்ணப்பிக்கலாம். இந்த சூழ்நிலையில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் தவெகவின் சின்னம், மக்கள் மனதில் எளிதில் பதியும் சின்னங்களாக இருக்க வேண்டும் விஜய் எண்ணி வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதன்படி, விசில், ஆட்டோ, வெற்றி கோப்பை உள்ளிட்ட சின்னங்களை தவெக பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் பட்டியலிடும் ஒரே ஒரு சின்னத்தை மட்டுமே தவெக தேர்வு செய்ய முடியும். ஒரு சின்னத்திற்கு பல கட்சிகள் விண்ணப்பித்தால் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதனால், தவெகவுக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தவெக மனு அளித்துள்ளது.
Follow Us