TVK Petition filed in Supreme Court for cbi investigation at Karur stampede incident
கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக இருக்கும் என்.ஆனந்த் மற்றும் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில், இருவரும் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அதோடு, அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்கக் கோரியும், சிபிஐ விசாரணை கோரியும் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ விசாரணை கோரிய வழக்கை எடுத்துக் கொண்ட நீதிபதிகள், விசாரணை தொடக்க நிலையில் உள்ள சூழ்நிலையில் நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்று காட்டமாகத் தெரிவித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றக் கிளையின் முடிவுக்கு எதிராக இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், கூட்ட நெரிசல், உயிரிழப்பு அனைத்திற்கும் அரசு நிர்வாகவே பொறுப்பு என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Follow Us