Thaweka points appeared on time - CBI digs for 6 hours Photograph: (cbi)
கரூரில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக கரூரில் இருக்கக்கூடிய சிபிஐ முகாமில் அக்கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தற்பொழுது கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்று காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகுமாறு சிபிஐ தரப்பிடம் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மூத்த நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், சி.டி.நிர்மல்குமார், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி மூவரும் சரியாக காலை 10 மணிக்கு ஆஜராகி இருந்தார்கள். தற்போது வரை ஐந்தரை மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. புகைப்பட ஆதாரங்கள், வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே கரூரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் நீட்சியாகவும் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தேவைப்பட்டால் தனித்தனியாகவும் அவர்களிடம் விசாரணை என்பது நடத்தப்பட இருப்பதாவும் கூறப்படுகிறது. கரூர் எஸ்பி மற்றும் டிஎஸ்பி ஆகியோரும் இந்த விசாரணைக்காக நேரில் ஆஜராகி உள்ளனர்.
காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் நேரில் ஆஜராகி இருக்கிறார்கள். அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எதற்காக அனுமதி வாங்கப்பட்டது; எவ்வளவு பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது போன்றவை குறித்தும், எத்தனை பேர் வந்திருந்தார்கள்; என்னென்ன மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன; விதிமுறை மீறல்கள் எதுவும் நடந்திருக்கிறதா; காவல்துறையினர் எத்தனை பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள் என்பது போன்ற அனைத்து விஷயங்கள் குறித்து தனித்தனியாக சிபிஐ அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை இன்னும் சில வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியும் சிபிஐ தரப்புக்கு இருக்கிறது. எனவே அந்த இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வதற்காக தீவிர விசாரணை என்பது நடந்து வருகிறது.
Follow Us