தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை (13.09.2025) திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பிரத்தியேக பிரச்சார வாகனம் வடிவமைக்கப்பட்டது.
அதில் அக்கட்சியின் கொடியின் வண்ணத்தில் வாகனம் அமைந்துள்ளது. 'உங்க விஜய் வரேன் நான்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த பிரச்சார வாகனத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள், தொண்டர்கள் வாகனத்தின் மீது ஏறாத வகையில் மேற்கூரை சுற்றி இரும்பாலான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையிலிருந்து திருச்சி சென்ற விஜய்யின் வாகனத்திற்கு விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குக் குழுமியிருந்த தொண்டர்கள் விஜய்யின் பிரச்சார வாகனத்திற்குக் கற்புரம் ஏற்றியும், தேங்காய் மற்றும் பூசனிக்காய் உடைத்தும் வழிபாடு செய்தனர். அப்போது ஏராளமான தொண்டர்கள் “த.வெ.க..... விஜய்....” என முழக்கம் எழுப்பினர். அதோடு அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.