திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை மற்றும் வெள்ளக்கோவில் பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகங்கள் திறப்பு விழா இன்று (01.01.2026) நடைபெற்றது. இதில் த.வெ.க. நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு சிவன்மலை பகுதியில் கிளை அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வெள்ளக்கோவில் பகுதிக்குச் சென்றார். அப்போது அவர் காரை விட்டு இறங்கிய சமயத்தில் குகன், மணி என்ற இருவர் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையனைச் சூழ்ந்து கொண்டனர்.
அவர்கள், “கடந்த 10 ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றி கழகம் என 10 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டுதல் உள்ளிட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் எங்களுக்குப் பொறுப்புகள் வழங்காமல் ஈரோடு மற்றும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வெள்ளக்கோவில் பகுதியில் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். எனவே உடனடியாக பொறுப்புகளை மாற்றி எங்களுக்கு வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தனர். அதோடு அவர்கள் செங்கோட்டையனை முற்றுகையிட்டனர்.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழகத்தினருக்கும், பொறுப்புகள் வழங்கக் கோரிக்கை விடுத்த நிர்வாகிகள் என இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்குப் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இதற்கிடையே இரு தரப்பினரிடமும் பேசிய செங்கோட்டையன், “கோபிசெட்டிபாளையத்தில் உள்ள எனது அலுவலகத்திற்கு வாருங்கள். அங்கு இது தொடர்பாகப் பேசி முடிவெடுக்கலாம்” என அவர்களைச் சமரசம் செய்து அனுப்பி வைத்தார். செங்கோட்டையனைத் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் திடீரென முற்றுகையிட்ட சம்பவமானது வெள்ளக்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/01/vellakoil-tvk-sengottaiyan-2026-01-01-18-36-34.jpg)