தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது.
அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவிர, தே.மு.தி.க., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பா.ம.க. ஆகிய கட்சிகள் கூட்டணி குறித்த முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தேர்தல் பரப்புரைக்கு த.வெ.க. தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று (13.02.2026) சேலத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார்
அதன்படி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியிலுள்ள தனியாருக்குச் சொந்தமான உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. அதாவது இந்த நிகழ்ச்சியானது முன் அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கியூ. ஆர். (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us