தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
இதனிடையே, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் விருப்ப மனு பெறும் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த 10ஆம் தேதி 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான விருப்ப மனு விநியோக பணியை தமிழக காங்கிரஸ் தொடங்கியது. அதனை தொடர்ந்து பா.ம.க சார்பில் போட்டியிட விரும்பும் விருப்ப மனு விநியோக பணியை அன்புமணி தரப்பு பா.ம.க தொடங்கி நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்றைக்கு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் தான் அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் தவெக சார்பில் இன்று (14-12-25) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், “வேட்பாளர்கள் அறிவிப்பு தொடர்பாக பரவி வரும் தகவல் உண்மையில்லை. கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மட்டும் தான் அறிவிப்பார். எங்களுடைய உயிர், மூச்சு, நாடி அனைத்தும் தலைவர் தான். செய்தியாளர்கள் எதையாவது சொல்லிவிடாதீர்கள். எங்களுக்கு எல்லாம் தலைவர் தான். 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து இரண்டு பெரும் தலைவரை பார்த்துவிட்டு எங்கள் தலைவரை செங்கோட்டையன் ஏற்றுக்கொண்டிருக்கிறார். 2026இல் தமிழக முதல்வராக விஜய் தான் வருவார். 234 தொகுதிகளிலும் வேட்பாளர் விஜய் முகம் தான். மக்கள் தவெகவுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/14/nanand-2025-12-14-15-13-53.jpg)