தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்தத் தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். அதே சமயம் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. மற்றொருபுறம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தேர்தல் ஆணையம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான பணிகளும் தொடங்கியுள்ளன. 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் த.வெ.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வரும் மணிகண்டன் என்பவர் அக்கட்சியினரிடம் பணம் பெற்றுக்கொண்டு பதவிகள் வழங்குவதாகவும், கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் பண பலம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. மேலும் பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட பேனரில் ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தையும் பயன்படுத்தியதால் வட்டச் செயலாளர் பிரதீப் மீது ஒழுங்கு நடவடிக்கையாக அவரை கட்சியில் இருந்து நீக்கியதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

Advertisment

இதன் காரணமாகத் திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் மீது அக்கட்சியினர் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகமான பனையூரில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்ட த.வெ.க.வினர், மணிகண்டனைக் கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி இன்று (14.12.2025) முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.