வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தீவிரப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முன்னெடுத்து வருகின்றன. தேர்தல் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகளின் தேர்தல் கூட்டணி, சுற்றுப்பயணம், பரப்புரை என களம் தீவிரமடைய தொடங்கியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கேட்கும் சின்னங்களை ஒதுக்கும் சூழலில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பொது சின்னங்களை கேட்டுப் பெறும் சூழல் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி சட்டப்பேரவையின் காலம் முடிவதற்கு 6 மாத காலத்திற்கு முன்னதாக பொது சின்னங்களை பதிவு செய்யப்பட்ட கட்சிகள் கேட்டு கோரிக்கை வைக்கலாம். 2021 ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவையின் காலம் முடிவதற்கான தேதியாக 10/05/2026 ஆம் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இன்று முதல் சின்னங்களை கோரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த சூழலில் தேர்தல் ஆணையத்திடம் முறையாக சின்னங்களை பெற அரசியல் கட்சிகள் முறையான அனுமதியை தொடங்கியுள்ளது.
அதன்படி பாமக தரப்பில் ராமதாஸ் தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது தலைமையிலான பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். 'பாமகவின் நிறுவனரான நான் கடந்த மே 5 ஆம் தேதி முதல் பாமகவின் தலைவராக உள்ளேன். எனவே தனது தலைமையிலான பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை வழங்குவதோடு, சின்னம் வழங்குவதை எங்கள் முகவரிக்கு அனுப்பி தெரியப்படுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
தற்போது பாமகவில் ராமதாஸுக்கு அன்புமணிக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டு இரண்டு பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் நடிகரும், எம்பியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தல் ஆணையத்தில் பொதுச்சின்னம் கோரியுள்ளது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட்டது. ஆனால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பொதுச்சின்னம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த முறை விசில் உள்ளிட்ட மூன்று சின்னங்களை பரிந்துரைத்து அதில் ஒன்றை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
அதேபோல் புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சின்னம் தொடர்பான கோரிக்கையை தேர்தல் ஆணையத்தில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஆட்டோ, விசில் உள்ளிட்ட 10 சின்னங்களை பட்டியலிட்டு அதில் ஒன்றை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், இந்த கோரிக்கையை அக்கட்சியின் நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் தேர்தல் ஆணையத்திடம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/013-2025-11-11-21-51-55.jpg)