TVK leadership in discontent Unfilled nomination papers
வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி தவெக, பரபரப்பாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மாநாடு, பொதுக் கூட்டம் எனத் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான வேட்புமனு விநியோகம் நடைபெற்றது. இதனால், மனுக்களைப் பெறுவதற்காக ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இந்த வேட்புமனுவின் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாயாக இருந்தது. இதையடுத்து, 10,000 மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, சில பல காரணங்களால் அடுத்த நாளிலிருந்து இந்த விண்ணப்ப விநியோகம் இணையதளம் மூலமாக நடைபெறும் எனக் கட்சித் தலைமை அறிவித்தது. மீண்டும் இந்த விநியோகம் 40,000 தாண்டியதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் சேர்த்து 50,000 வேட்பு மனுக்கள் விற்றுத் தீர்ந்தது. இந்த விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து, மனுக்களைத் திருப்பியளிக்க வேண்டிய கடைசி நாள் வருகின்ற 20 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெறப்பட்ட மொத்த மனுக்களில் இதுவரை பூர்த்தி செய்யப்பட்டு, கட்சி அலுவலகத்திற்கு வந்த மனுக்களின் எண்ணிக்கை 5000 மட்டுமே என்று கூறப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், எதிர்பார்க்கப்பட்ட அளவிலான விருப்ப மனுக்கள் வரப்பெறாதது கட்சித் தலைமையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த மீதமுள்ள இரண்டு நாட்களில் இந்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கட்சி மேலிடம் நம்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த வேட்பு மனுக்களைப் பூர்த்தி செய்து திருப்பியளிக்கும் போது, பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ரூ.10000 மற்றும் தனி தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் ரூ.5000 கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கட்சி மேலிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow Us