தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் வாரத்தில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அதன்படி கடந்த வாரம் திருச்சி மற்றும் அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரையாற்றினார். 

Advertisment

இதனையடுத்து இந்த வாரம் அதாவது நாளை (20.09.2025 - சனிக்கிழமை) நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன் ஒரு பகுதியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் விஜய் நாளை திருவாரூர் நகர்ப் பகுதியில் உள்ள திருவாரூர் தியாகராஜர் கோவில் தெருவில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் திருவாரூர் தலைமை அலுவலகம் மூலம் வெளியான அறிவிப்பில், “திருவாரூரில் உள்ள அடியக்கமங்கலம் துணை மின் நிலையம் உள்ளிட்ட திருவாரூர் நகர்ப் பகுதி சுற்றியுள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்” எனச் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் திருவாரூர் நகர உதவி செயற்பொறியாளர் எஸ். ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வருகின்ற 20.09.2025 சனிக்கிழமை அன்று திருவாரூர் துணைமின் நிலையத்தின் மின் பாதைகளில் உத்தேசிக்கப்பட்டிருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நிர்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.