Advertisment

“தமிழ்நாட்டில் நடப்பது கொடுங்கோல் ஆட்சி தான்” - த.வெ.க. தலைவர் விஜய்!

tvk-vijay

பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

Advertisment

இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்காக ரிப்பன் மாளிகை வளாகம் நேற்று (13.08.2025) மாலை முதலே போலீசாரின் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட்டத்தை தொடர்ந்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வந்த நிலையில் போலீசார் குண்டுகட்டாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு த.வெ.க. தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம். குண்டுக் கட்டாக இழுத்துச் சென்று கைது செய்த போது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. 

நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும் போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 

gcc-sanitation-worker-pro

குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?. ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா?. இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள். அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?. 

அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?. அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Chennai tn govt tvk vijay Tamilaga Vettri Kazhagam chennai corporation sanitary workers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe