2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக வெற்றிக் கழகமும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கி வருகிறது. இந்நிலையில் த.வெ.க.வின் உறுப்பினர் சேர்க்கைக்கான மை டி.வி.கே, (MY TVK) செயலி தொடர்பான விவரங்கள் வெளியாகியிருந்தன. அதில் உறுப்பினர் சேர்க்கையின் போது புகைப்படம் எடுத்து தொலைப்பேசி எண்ணைச் செயலியில் பதிவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய வகையிலான ஓ.டி.பி. கேட்கப்படாத வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. ஒரு வாக்குச்சாவடியில் எத்தனை வீடுகள் உள்ளன. எவ்வளவு வாக்காளர்கள் இருக்கிறார்கள் போன்ற தகவல்கள் இந்த செயலியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக த.வெ.க.வின் உறுப்பினர் செயலி இன்று (30.07.2025) வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ‘வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ என்ற பிரச்சார இயக்கத்தை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய் பேசுகையில், “லவ் யூ டூ. எல்லாருக்கும் வணக்கம். இதற்கு முன்னாடி நம்ம தமிழக அரசியலில் நடந்த 2 மிகப்பெரிய தேர்தல்கள் நான் சொல்வது 1967 மற்றும் 1977. அது மாதிரி 2026யும் அமையப்போகிறது. அப்படின்றத நம்ம ரொம்ப உறுதியாக இருக்கிறோம். முதலில் இருந்து அதை நாம் சொல்லிக்கிட்டு இருக்கிறோம். அந்த 2 மாபெரும் தேர்தல்களில் ஆல்ரெடி தொடர்ந்து வின் பண்ணிட்டு இருந்தவர்களுடைய அதிகார பலம், அசுர பலம் எல்லாத்தையும் எதிர்த்து நின்னுதான் புதுசா வந்தவங்க ஜெயிச்சிருக்காங்க. எப்படி ஜெயிச்சாங்க அப்படியென்று பார்க்கும்போது அது சிம்பிள் லாஜிக் தான். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு அப்படியென்று போய் எல்லா மக்களையும் சந்திச்சிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் அறிஞர் அண்ணா சொன்ன அதே விஷயத்தைத் தான் நானும் இங்க ரிப்பீட்பண்ணனும்னு ஆசைப்படுகிறேன். மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ், மக்களுடன் சேர்ந்து திட்டமிடு இதைச் சரியாகச் செஞ்சாலே போதும். ஊருக்கு ஊர் வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு வெற்றி பேரணியில் தமிழ்நாடு அப்படியென்ற கான்செப்ட்ல எல்லா குடும்பங்களையும் ஒன்றாக சேர்த்து உறுப்பினர்களாகச் சேர்த்து நம்மாளால் கண்டிப்பா ஜெயிக்க முடியும். அதனால் தான் மை டி.வி.கே. என்ற இந்த ஆப்பை (APP) இன்றைக்கு நான் அறிமுகப்படுத்துவதில் ரொம்ப சந்தோஷப்படுறேன்.
இதற்கப்புறம் மதுரை மாநாடு மக்கள் சந்திப்பு பயணம் அப்படியென்று தொடர்ந்து மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். அதனால் இப்போதிலிருந்து இதற்கான வேலையை எல்லாரும் ஸ்டார்ட் பண்ணுங்கள். நாம இருக்கிறோம். நம்ம கூட மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம் தேங்க்யூ” எனப் பேசினார்.